துருவ் விக்ரமால், சியான் விக்ரமுக்கு வந்த வாய்ப்பு!
'சியான்' விக்ரம் நடிப்பில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்குப் பின் பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இந்நிலையில் விக்ரம், இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் கைகோர்க்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
'தங்கலான்' திரைப்படத்தில் விக்ரம் நடித்து வரும் நிலையில், இப்படம் கோலார் தங்கவயல் பகுதியை மையமாகக் கொண்டு உருவாகிவருகிறது.
ஒவ்வொரு படத்திலும் எதாவது வித்தியாசம் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடியவர் விக்ரம். இந்நிலையில், இப்படத்தில் ஆதிவாசி போன்றதொரு தோற்றத்தில், முடி, தாடி என வளர்த்து தன்னை மாற்றி வித்தியாச தோற்றத்தில் நடித்து வருகிறார். அது சம்பந்தமான புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், நடிகர் விக்ரம் இயக்குநர் மாரி செல்வராஜுடன் கைகோர்க்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, பா.ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அதற்காக அவர் துருவ் விக்ரம் வீட்டிற்கு சென்று கதை டிஸ்கஷனில் ஈடுபட்டு வந்துள்ளார். அச்சமயத்தில் விக்ரமும் உடன் இருக்கிறார்.

அவர் சொல்லும் கதைகளை கேட்ட விக்ரம், தனக்கும் ஒரு கதை சொல்லும்படி கூறியுள்ளார். இதையடுத்து மாரி செல்வராஜும் விக்ரமுக்கு ஏற்ற ஒரு கதையை கூறியுள்ளார். இதைக் கேட்ட விக்ரமுக்கு அந்தக் கதை பிடித்துப் போக, தனக்கான படத்தை இயக்கும்படி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்திற்கான தயாரிப்பு பணிகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம், நீங்க இயக்குங்கள் என்று விக்ரம் கூறியதாகவும், தற்போது மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் படத்தை முடித்து விட்டு அடுத்ததாக, விக்ரமை வைத்து இயக்குவார் எனவும் கூறப்படுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில், 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' போன்ற வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுக்கும் மாரி செல்வராஜின் இயக்கத்தில் விக்ரம் நடித்தால் அப்படம் விக்ரம் கேரியரில் ஒரு வித்யாசமான திரைப்படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.