நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இயக்குனர் மோகன்ராஜா தற்போது வெளியிட்டுள்ளார்.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.மாறுபட்ட கதைக்களத்தை கொண்டு வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியான வரவேற்போடு வசூல் ரீதியான வெற்றியையும் பெற்றது.
மேலும் இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன், தம்பி ராமையா, நாசர் உள்ளிட்ட முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்தார். தனி ஒருவன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனி ஒருவன் இரண்டாம் பாகம் எடுக்க ஜெயம் ரவியின் சகோதரர் மோகன் ராஜா திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தனி ஒருவன் படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு மோகன் ராஜா தனி ஒருவன் இரண்டாம் பாகத்திற்கான அதிகாரப்பூர் அறிவிப்பை தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், மூன்றாவது முறையாக ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்துடனும், நான்காவது முறையாக லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடனும், ஏழாவது முறையாக ஜெயம் ரவியுடனும், எனது பதினோராவது படமான தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் இணைய உள்ளேன் என்பதை பெருமையோடு அறிவிக்கிறேன். இதற்காக ரசிகர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனி ஒருவன் முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் கதைக்கான முக்கியத்துவம் கூடுதலாக அளிக்கப்படும் என்று பட குழு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.