
நீண்ட காலங்களுக்கு பிறகு மீண்டும் இசைத்துறையில் கவனம் செலுத்தவுள்ளார் பன்முக கலைஞர் டி.ராஜேந்திரன். இவர் தற்போது ‘நான் கடைசி வரை தமிழன்’ என்ற திரைப்படத்திற்கு பாடல் எழுதி இசை அமைக்கவுள்ளார்.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், வசனம், திரைக்கதை என்று ஒரு திரைப்படம் உருவாகத் தேவையான பல்வேறு பணிகளை சர்வசாதாரணமாக செய்து முடிப்பவர் டி.ராஜேந்திரன். 1980 ஆம் ஆண்டு ஒருதலை ராகம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இவர். அன்று முதல் இன்று வரை தமிழ் திரை உலகில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். டி. ராஜேந்திரன் அடுக்குமொழியில் பேசும் வசனங்கள் அவருடைய தனி அடையாளமாகவே மாறிவிட்டது.
அதே நேரம் டி .ராஜேந்திரன் பல ஆண்டுகளாக இசையமைப்பதை நிறுத்திவிட்டு நடிப்பதில் மட்டும் ஆர்வம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் தற்போது புதிதாக உருவாக உள்ள திரைப்படத்திற்கு அவர் இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிஆர்டி நிறுவனம் தயாரிப்பில், எம் ஏ ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘நான் கடைசி வரை தமிழன்‘ என்ற திரைப்படத்தில் டி.ராஜேந்திரன் பாடல் ஒன்றை எழுதி இசையமைக்க உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் படத்தினுடைய தொடக்க நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய டி. ராஜேந்திரன் நான் பண்ணாரி அம்மன் திரைப்படத்திற்கு பிறகு இசையமைப்பதை நிறுத்தி விட்டேன். தற்போது இசையமைப்பதற்கு காரணம் படத்தினுடைய டைட்டில் தான். நான் கடைசி வரை தமிழன் என்ற வார்த்தை எனக்கு பிடித்திருந்தது. அதே நேரம் இயக்குனரிடம் உயிர் உள்ளவரை தமிழன் என்று மாற்றலாம் என்று கூறியதற்கு அவர் கடைசி வரை தமிழன் என்பதே டைட்டில் என்று பிடிவாதமாக இருந்தார். அவரும் பிடிவாதக்காரர், நானும் பிடிவாதக்காரன். அதனால் எங்களுக்குள் ஒத்து போனது. தமிழன் என்பது இனிப்பு. அதனால் படத்திற்கு இசையமைக்க ஒத்துக் கொண்டேன் என்று தெரிவித்தார்.