
எளிய மக்களின் வாழ்க்கை, அரசியல், பொருளாதாரம் என்று ஒவ்வொரு அங்குலங்களையும் தன்னுடைய திரைப்படத்தின் மூலம் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தும் இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்த நாள் இன்று. இதில் அவருடைய திரை வரலாற்றை பார்ப்போம்.
திரைத்துறை என்பது எளியவரையும் மிக விரைவில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். அதே நேரம் திரைத்துறையில் ஏற்படும் தோல்வியும் தாங்கியாக கொள்ள முடியாத அளவிற்கு வலியை தரக்கூடியது. இது மட்டுமல்லாது பிரம்மாண்டம், கவர்ச்சி, பப்ளிசிட்டி இன்று பல்வேறு வகையான தன்மைகளைக் கொண்ட திரைத்துறையில் சாதாரண கதைகளை கொண்டு சரித்திரம் படைத்தவர் வெற்றிமாறன். ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த வெற்றிமாறன் மிகத்தீவிர கிரிக்கெட் வெறியர். இவரின் தந்தை கால்நடை ஆராய்ச்சியாளர், தாய் ஆசிரியை ஒரு சகோதரி என்று சிறிய குடும்பத்தில் பிறந்த வெற்றிமாறன் திரைத்துறையின் மீது கொண்ட ஆர்வத்தினால் குடும்பத்தார்களுடன் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி திரைத்துறையில் பயிற்சி பெறுவதற்காக சென்னை லயோலா கல்லூரியில் இணைகிறார். அதன்பிறகு திரை உலகத்திற்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள்ளும் வெற்றிமாறன். பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இணைகிறார்.
இளங்கலை ஆங்கிலத்தில் பட்டம் பெற்ற வெற்றிமாறன், பல்வேறு நாவல்களைப் படித்து இருந்ததாலும், பாலுமகேந்திராவிடம் திரை அனுபவத்தைப் பெற்று இருந்ததாலும் கதைகளை எளிதில் காட்சிப்படுத்த கற்றுக் கொண்டார்.
இதன் காரணமாக பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான கதை நேரம் என்ற சீரியல் மற்றும் கதிர் இயக்கத்தில் வெளியான காதல் வைரஸ் திரைப்படத்தில் வெற்றிமாறனுக்கு உதவி இயக்குனர் என்ற வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில் நடிகர் தனுஷ் உடன் நட்பு ஏற்பட, தனுஷிடம் தான் உருவாக்கிய கதையை வெற்றிமாறன் தெரிவித்திருக்கிறார். உடனே அந்த கதை தனுஷ்க்கு பிடித்து போக இருவரும் இணைந்து பொல்லாதவன் படத்தை எடுக்க திட்டமிடுகின்றனர்.
இயக்குனர் வெற்றிமாறனின் முதல் திரைப்படம் பொல்லாதவன் என்றாலும் படத்தின் இருக்கக்கூடிய காட்சிகள், கதைய அம்சங்கள் மிகவும் அனுபவம் பெற்ற ஒரு இயக்குனரினுடைய படம் போல் இருந்ததாக வெற்றிமாறனை புகழின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. அதே நேரம் இளைஞர்களிடம் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதால் முதல் படத்திலேயே வெற்றிமாறன் ஒட்டுமொத்த திரை உலகின் கவனத்தை ஈர்த்தார்.
அதன் பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ஆடுகளம் படம் மிக எளிமையான மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி சூழலை சிறப்பாக காட்சிப்படுத்தியிருந்தது. மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதோடு நிற்காமல் 6 தேசிய விருதுகளை வாங்கி குவித்தது. அதன் தொடர்ச்சியாக வெற்றிமாறன் இயக்கிய விசாரணை திரைப்படம் உலக வெனிஸ் திரைப்பட விழாவில் மனித உரிமைக்கான விருதை பெற்று, உலக அரங்கில் தமிழ்த் திரைப்படம் பாராட்டப்படுவதற்கு காரணமாக அமைந்தது.
வட சென்னை திரைப்படம் சென்னையினுடைய ஒரு முகத்தை அப்பட்டமாக காட்டி இருந்தது. அசுரன் திரைப்படத்தில் பஞ்சமி நிலத்தை பற்றிய அரசியலை மிகவும் சுவாரசியமாக காட்சிப்படுத்தி, கல்வியின் முக்கியத்துவத்தை கூறியிருந்தார். இப்படம் வெற்றிமாறனினுடைய தொடர் வளர்ச்சியின் முக்கிய மைல்கல்லாக மாறியது. அதைத்தொடர்ந்து விடுதலை திரைப்படமும் ஒட்டுமொத்த திரை உலகத்தாலும் கொண்டாடப்பட்டது.17 ஆண்டு கால திரை வாழ்க்கையில் மிக சொற்ப படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார் வெற்றிமாறன். எளிய மக்களினுடைய கதை எதார்த்தமாக காட்சிப்படுத்துவதை தன்னுடைய திறமையாக கொண்ட வெற்றிமாறன் அடுத்தடுத்த படைப்புகளும் அவரை மாபெரும் வெற்றிக்கு அழைத்து செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.