ஜவான் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ஜவான் திரைப்படத்தின் முதல் வசூல் 150 கோடி ரூபாயை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ளது ஜவான் திரைப்படம். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் மற்றும் நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
படம் வெளியாவதற்கு முன்பே நாடு முழுவதும் அதிகம் விளம்பரம் செய்யப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக நடிகர் ஷாருக்கான் ஜவான் திரைப்படத்தை பல்வேறு வகைகளில் மார்க்கெட்டிங் செய்து அனைத்து தரப்பட்ட மக்கள் மத்தியிலும் படத்தை பார்க்க வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டினார்.
இந்த நிலையில் செப்டம்பர் 7 நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் முதல் நாள் மட்டும் 150 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் ஜவான் திரைப்படம் 75 கோடி வசூல் செய்து பாலிவுட் திரைப்படங்களில் முதல் நாள் வசூல் உச்சம் தொட்ட படம் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறது. இதற்கு முன்பு நடிகர் ஷாருக் கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் முதல் நாளில் இந்தியாவில் 57 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.
தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள ஜவான் திரைப்படத்தின் அடுத்த 2 விடுமுறை நாட்களுக்கான டிக்கெட்டுகளும் தற்போதே விற்று தீர்ந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் ஜவான் திரைப்படம் முதல் 4 நாட்களிலேயே எதிர்பார்த்த அளவு வசூலை ஈட்டும் என்று சொல்லப்படுகிறது.