சூர்யாவின் 'கங்குவா' பட டைட்டில் அர்த்தம் தெரியுமா? உண்மையை உடைத்த சிறுத்தை சிவா!
பலத்த எதிர்பார்ப்புக்கிடையே 'சூர்யா 42' படத்தின் தலைப்பு, அருமையான மோஷன் போஸ்டருடன் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அதன்படி 'சூர்யா 42' படத்திற்கு கங்குவா என வித்தியாசமான பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் டைட்டில் எதைக் குறிக்கிறது என நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர்.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் க்ரியேஷன் நிறுவனம் இணைந்து 'சூர்யா 42' திரைப்படத்தை 10 மொழிகளில், பிரம்மாண்டமான பொருட்செலவில் 3D முறையில் சரித்திர படமாக உருவாக்கி வருகிறது. சூர்யாவிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, இவர்களுடன் யோகி பாபு, கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்ரீதேவி பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்க, வெற்றி பழனிச்சாமி கலை இயக்குனராகவும், படத்தொகுப்பாளராக நிஷாந்த் யூசுப்பும் பணியாற்ற உள்ளனர்.
இப்படத்தின் அப்டேட்ஸ் அவ்வப்போது வந்த நிலையில், நேற்று இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியானது. அதன்படி படத்தின் பெயர் 'கங்குவா' என்று வைக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டிலை பார்த்த நெட்டிசன்கள் அதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என அறிந்துகொள்ள ஆவலாக இருந்து வரும் நிலையில், இப்படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா, சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் படத்தின் தலைப்பு குறித்து கூறியுள்ளார்.

அதன்படி, 'கங்கு' என்பது பழங்காலத் தமிழ்ச் சொல்லான நெருப்பு என்றும், 'கங்குவா' என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என்றும் வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல், 'கங்குவா' மோஷன் போஸ்டரில் இடம்பெற்ற குதிரை, நாய், கழுகு ஆகியவை கதையில் மிக முக்கியமானவை என்றும் சிறுத்தை சிவா தெரிவித்துள்ளார்.
இப்படம் 1000 வருடங்களுக்கு முன் நடக்கும் கதையையும் தற்போதைய காலத்திற்கு ஏற்றார் போல் நடக்கும் கதையையும் மையப்படுத்தி அமைந்துள்ளதால், அதற்கேற்றார்போல் சூர்யா வெவ்வேறு கெட்டப்புகளில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரசிகர்களும் ஆவலோடு இப்படத்தை எதிர்நோக்கி இருக்கும் நிலையில், இப்படத்தின் வெளியீட்டு தேதி 2024ம் ஆண்டு தொடக்கத்தில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.