நடிகர் பிரித்விராஜின் இன்ஸ்பிரேஷன் யார் தெரியுமா?

நடிகர் பிரித்விராஜின் இன்ஸ்பிரேஷன் யார் தெரியுமா?

மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாறன் சமீபத்தில் வால்ட் டிஸ்னி இந்தியா மற்றும் ஸ்டார் இந்தியா நிறுவனத் தலைவரான கே.மாதவனின் மகன் கெளதம் மாதவன் திருமணத்தில் கலந்து கொண்டார். இந்த திருமண விழாவில் இவர் மட்டுமல்ல ஒட்டுமொத்த கோலிவுட், பாலிவுட், சாண்டல்வுட், டோலிவுட் என அனைத்து வுட்களைச் சேர்ந்த இந்தியத் திரைப்பட நட்சத்திரங்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடந்த இந்த திருமண விழாவின் ஹைலைட் என்றால் எதைச் சொல்வது? ப்ரித்விராஜும் அமீர் கானும் மனம் விட்டுச் சிரித்த போது அந்த தருணத்தை அழகான பதிவாக்கிய புகைப்படத்தைச் சொல்லலாமா? அல்லது அக்ஷய் குமாரும், லாலேட்டனும் ஆடிய பாங்ரா டான்ஸ் காணொலியைச் சொல்லலாமா? விழாவைப் பொருத்தவரை பிரமிக்க அனேக விஷயங்கள் இருந்தாலும் பிரித்விராஜும், அமிர்கானும் அருகருகே அமர்ந்து கொண்டு மனம் விட்டுச் சிரித்துக் கொண்டிருந்த அந்த புகைப்படம் இணையவாசிகளின் மனதை ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொண்டது.

அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ’ Inspiration, Idol’ எனும் அடைமொழியிட்டுப் பிரித்விராஜே பகிர்ந்திருந்தார்.

பிரித்விராஜைத் தொடர்ந்து நடிகர்

அக்ஷய் குமாரும் தனது இன்ஸ்டா பக்கத்தில் மோகன்லாலுடன் ஆடிய பாங்ரா டான்ஸ் காணொலியைப் பகிர்ந்து,

“I’ll forever remember this dance with you @mohanlal Sir. Absolutely memorable moment.”

என மனதார விழா நிகழ்வுகளையும், தருணத்தையும் கொண்டாடி இருந்தார்.

மலையாளத்தில் ‘காப்பா’ திரைப்படத்துக்குப் பிறகு தற்போது கரண் ஜோஹருடன் இணைந்து இந்தியில் ‘செல்ஃபீ’ என்ற திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார் பிரித்விராஜ். இத்திரைப்படம் மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளிவந்த ’டிரைவிங் லைசன்ஸ்’ திரைப்படத்தின் இந்தி தழுவலே எனக் கூறப்படுகிறது!

பிரித்விராஜ் தயாரிப்பில் ஓடிடி யில் வெளியான காப்பா திரைப்படம் நெட்டிஸன்களிடையே சமீபத்தில் மிக நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் ஒரு மினி டவுன் இளம்பெண் செல்போன் ராங் கால் மூலமாக அறிமுகமாகும் புதிய நபர் ஒருவரைக் காதலிக்கத் தொடங்கி அவளது வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத திடுக்கிடும் அதிர்ச்சியை மையமாகக் கொண்டு வெளிவந்திருந்தது. இன்றைக்கு சமூக ஊடக நட்புகளால் பல இன்னல்களுக்கு உள்ளாகும் இளம் தலைமுறையினர் ஒருமுறையேனும் காண வேண்டிய திரைப்படங்களில் ஒன்று என இதைக் குறிப்பிட்டிருந்தனர்.

இவை தவிர தெலுங்கில் பிரபாஸ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘சலார்’ திரைப்படத்தில் பிரபாஸுடன் இணைந்து பிரித்விராஜ் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com