சல்மான் கானுக்கு இ மெயில் மிரட்டல்! லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் மேலும் இருவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு!

சல்மான் கானுக்கு இ மெயில் மிரட்டல்! லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் மேலும் இருவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு!

நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் இ மெயில் ஒன்று வந்ததாகத் தகவல். இப்படி ஒரு இ மெயில் அவரது மெயில் முகவரிக்கு வந்ததாக மும்பையில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து காவல்துறையில் புகார் பதியப்பட்டதை அடுத்து மும்பை காவல்துறை லாரன்ஸ் பிஷ்னோய் , கோல்டி ப்ரார் மற்றும் மேலுமொரு நபர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இந்தியில் எழுதப்பட்ட அந்த இ மெயிலில், "கோல்டி பாய் (கோல்டி பிரார்) சல்மான் கானுடன் நேருக்கு நேர் பேச விரும்பினார்". என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பிஷ்னோய் மற்றும் பிரார் தவிர, சனிக்கிழமை பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், ரோஹித் என்றொரு நபரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி கூறினார்.

இந்த வழக்கில் பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தற்போது பாடிண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிஷ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

சல்மான் கானுக்கு வந்த இ மெயில் மிரட்டல் குறித்து பிரசாந்த் குஞ்சல்கர் என்பவர் தான் பாந்த்ரா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்,பாந்த்ராவில் உள்ள சல்மான் இல்லத்திற்கு அடிக்கடி சென்று வரக்கூடியவரான இவர் ஆர்டிஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

சனிக்கிழமை மதியம் கேலக்ஸி அபார்ட்மெண்டில் உள்ள கானின் அலுவலகத்தில் குஞ்சல்கர் இருந்தபோது, "ரோஹித் கர்க்" என்ற ஐடியிலிருந்து ஒரு இ மெயில் வந்ததை அவர் கவனித்தார், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தான் எஃப் ஐ ஆர் பதியப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

ஹிந்தியில் எழுதப்பட்ட அந்த இ மெயிலில், லாரன்ஸ் பிஷ்னோய் சமீபத்தில் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியை சல்மான் கான் பார்த்திருக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் குஞ்சல்கர் அளித்த புகார் அடிப்படியிலான எஃப் ஐ ஆரின் படி, கான் இந்த விஷயத்தை முடிக்க விரும்பினால், கோல்டி பாயுடன் நேருக்கு நேர் பேச வேண்டும். இன்னும் நேரம் இருக்கிறது ஆனால் "அடுத்த முறை ஜாட்கா தேக்னே கோ மிலேகா" என்று அந்த இ மெயிலில் கூறப்பட்டிருந்தது.

இந்த மிரட்டல் இமெயில் விடுத்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 120-பி (குற்றச் சதிக்கான தண்டனை), 506-II (கிரிமினல் மிரட்டலுக்கான தண்டனை) மற்றும் 34 (பொது நோக்கம்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிஷ்னோய் உடனான பேட்டியை தனியார் செய்தி சேனல் ஒன்று சமீபத்தில் ஒளிபரப்பியது. அதையொட்டி இப்படி ஒரு இ மெயில் மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதால் காவல்துறை இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக் கொண்டு விசாரணையில் இறங்கி இருப்பதாகத் தகவல்.

கடந்த ஆண்டு ஜூன் 2022 இல், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சல்மான் கானை கையால் எழுதப்பட்ட குறிப்பு மூலம் மிரட்டினார் என்பதும் தற்போது மீண்டும் குறிப்பிடத்தக்கதாயிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com