கந்து வட்டி கொடுமையை சொல்லும் எறும்பு!

கந்து வட்டி கொடுமையை சொல்லும் எறும்பு!

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கந்துவட்டி கொடுமைகளைப் பற்றி இயக்குநர் சுரேஷ் குணசேகரன் இயக்கத்தில் எறும்பு என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. குழந்தை நட்சத்திரங்களான மாஸ்டர் சக்தி ரித்விக் மற்றும் மோனிகா நடித்துள்ளார்கள். நடிகர் சார்லி இவர்களின் தந்தையாக நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்,'' வெள்ளித்திரை படத்திற்கு பிறகு இனிய நண்பரான சார்லியுடன் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியை மேம்படுத்துவதற்காக சார்லியும், நானும் விவாதிப்போம். இதனை இயக்குநரும் அனுமதிப்பார். விசயம் நன்றாக இருந்தால், இயக்குநர் சுரேஷ் அதனை இணைத்துக் கொள்வார். என்னைப் பொறுத்தவரை எப்போதும் சுறுசுறுப்பாகவே பணியாற்றும் இயக்குநர் சுரேஷ் தான் எறும்பு.

இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது என்னுடைய கண் முன்னால் கந்து வட்டியின் கொடுமை தாங்காமல் தீக்குளித்த ஒரு குடும்பத்தினரின் புகைப்படம் வந்து சென்றது. வட்டி வாங்குவது வேதனையான விசயம். மிக கடுமையாக பேச வேண்டிய வேடம் இது. இதனால் சில தருணங்களில் எனக்கே என் மீது வெறுப்பு வந்தது. அந்த இரண்டு குழந்தைகள் வட்டி கட்டுவதற்காக உழைக்கும் உழைப்பு எப்படி இருந்தது என்றால்.. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பார்களே.. அப்படி இருந்தது. அந்த வகையில் ‘எறும்பு’ நல்ல கருத்தை சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அதிகபட்சம் யாரும் கடன் வாங்காதீர்கள். ஏனெனில் கடன் என்பது மிக மோசமான விசயம். வாங்கிய கடனை தர முடியாமல் குடும்பத்துடன் தீக்குளித்து இறந்த செய்தியை பேப்பரில் படித்து பதை பதைத்து போனேன். அப்படி வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த கடனை அடைப்பதற்கான வருவாயை ஆண்டவன் நமக்கு அருள வேண்டும். இந்தப் படத்தை வெற்றிப்படமாக்க வேண்டும் என அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். '' என்கிறார் பாஸ்கர் அக்கறையுடன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com