
ஒருகாலகட்டத்தில் சினிமாவைப் பொறுத்தவரை, திரையில் வெளியாகும் படங்கள் நிறைய நாட்கள் ஓடவேண்டும் என்றால் அப்படத்தில் முன்னணி கதாநாயகர்கள் நடித்தால் மட்டுமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, நிறைய நாட்கள் அந்தப் படம் திரையரங்கில் ஓடும்.
ஆனால் அந்தக் காலம் மாறி, முன்னணி கதாநாயகர்களின் படங்கள் என்றில்லாமல், ஒரு அறிமுக இயக்குநர் இயக்கிய படமாக இருந்தாலும் நல்ல கதையம்சம் உள்ள படமாக, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நிலையில் நீண்ட நாட்கள் ஓடும்.
இப்போது அதையும் தாண்டி, புதுமுகம் நடித்தாலும் சரி, காமெடி நடிகர் வித்தியாச கதாபாத்திரத்தில் நடித்தாலும் சரி, அந்தப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சாதனைகளும் படைத்து வருகின்றன.
மொத்தத்தில் படத்தை யார் எடுத்தாலும் சரி, யார் நடித்தாலும் சரி, ரசிகர்களைக் கவரும் வகையில் இருக்கவேண்டும் என்பதே இப்போதைய ட்ரெண்ட்டாக உள்ளது.
அந்தவகையில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த சூரி, முதன்முறையாக கதையின் நாயகனாக, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வெளியான திரைப்படம்தான் 'விடுதலை'. இப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, தற்போது ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் படம் ஓடிடியில் வெளியாகியும், சூரி நடித்துள்ள இப்படம் திரையரங்கில் 50 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. பொதுவாக ஓடிடியில் வெளியான பின்பு திரையரங்குகளில் ஓடுவது குறைவுதான்.
சமீபத்தில் விஜய், அஜித் நடிப்பில் வெளியான 'வாரிசு', 'துணிவு' படங்கள்தான் ஓடிடியில் வெளியான பின்பும், திரையரங்கில் 50 நாட்களைக் கடந்தும் ஓடின என்பதும் குறிப்பிடத்தக்கது.