தற்காப்புக் கலை வீராங்கனையாக இருந்தும் கூட இரவுகளில் பாதுகாப்பற்று உணர்கிறேன்: ரித்திகா சிங்!

தற்காப்புக் கலை வீராங்கனையாக இருந்தும் கூட இரவுகளில் பாதுகாப்பற்று உணர்கிறேன்: ரித்திகா சிங்!

ஹரியானாவில் நான்கு ஆண்களால் ஒரு காரில் கடத்தப்பட்ட இளம் பெண்ணின் துயரத்தை விவரிக்கும் வகையில் வெளியாகும் ‘இன்கார்’ எனும் திரைப்படத்தில் ரித்திகா சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் மார்ச் 3 ல் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.

தொழில்முறை மார்சியல் ஆர்ட் (தற்காப்புக் கலை) வீராங்கனையான ரித்திகா சிங் முதல் முறையாக 2016 ஆம் ஆண்டில் இறுதிச் சுற்று எனும் திரைப்படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாகத் தமிழில் அறிமுகமானார். இந்தப் படத்தில் அவர் குத்துச் சண்டை வீராங்கனையாக அறிமுகமானார், இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், இந்தி என இரு மொழிகளில் வெளியானது. இதே திரைப்படம் குரு என்ற பெயரில் தெலுங்கில் எடுக்கப்பட்டு வெளியானது, அதில் நாயகன் வெங்கடேஷ்.

ரித்திகா ஒரு பயிற்சி பெற்ற மிக்ஸ்டு மார்சியல் ஆர்ட்ஸ் வீராங்கனை என்பதால் அவரை போட்டிகளில் நேரில் கண்டு தான் படத்தின் இயக்குனரான சுதா கொங்காரா அவரை அத்திரைப்படத்தின் நாயகியாகத் தேர்வு செய்ததாக ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

இறுதிச் சுற்று திரைப்படத்திற்குப் பிறகு ரித்திகா, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து ‘ஆண்டவன் கட்டளை’ என்றொரு திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழில் நடிகர் ராகவா லாரன்ஸுடன் ஒரு படம் நடித்து முடித்து விட்டு கடைசியாக 2020 ல் ரொமாண்டிக் லவ் ஸ்டோரியான ஓ மை கடவுளே திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு ஒரு சிறு இடைவெளிக்குப் பின் இப்போது ‘இன்கார்’ என்ற தலைப்பில் ஒரு சர்வைவலிஸ்ட்-திரில்லர் வகைத் திரைப்படமொன்றில் மீண்டும் நாயகியாக நடிக்கவிருக்கிறார்.

ஒரு நடிகையாக எனக்கு கிடைக்கும் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் என்னால் திறம்பட ஏற்று நடிக்க முடியும், அதற்கான வலிமை எனக்கு உண்டு என்று தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இன்கார் திரைப்படத்தில் நடிக்கும் போது அது எத்தனை கடினம் என்பதை நான் உணர்ந்தேன். 35 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடந்தது. உடல் பாதிப்பைக் காட்டிலும் மனதால் நான் நிறையவே இதில் பாதிப்புக்கு உள்ளானேன் என்கிறார் ரித்திகா.

இத்திரைப்படத்தில் நடிக்கும் போது, நிஜ வாழ்க்கைக்கும், திரை வாழ்க்கைக்குமான மெல்லிய நூல் அறுந்து அந்த கதாபாத்திரமாகவே தான் மாறிப்போனதாகத் தெரிவிக்கும் ரித்திகா படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாகியும் கூட சில நேரங்களில் காலையில் படுக்கையில் இருந்து என்னால் எழும்பவே முடிந்ததில்லை அத்தனை அழுத்தமாக அந்தக் கதாபாத்திரத்தின் வலி என்னுள் பதிந்து போனது என்று குறிப்பிடுகிறார்.

அந்தப் படத்தில் காரில் கடத்தப்படும் இளம்பெண்ணாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து ஒரு பெண்ணாக எப்போதுமே நான் பாதுகாப்பாக உணரவே இல்லை என்கிறார். நிஜ வாழ்க்கையில் கலகலப்பான பெண் தான் நான். சாலையில் ஒரு பட்டாம் பூச்சியைக் கண்டால் கண்கள் பளபளக்கக் கூடிய சாதாரண இளம்பெண் தான் நானும், ஆனால், இத்திரைப்படத்தில் கார் அதன் இலக்கை அடையும் ஷாட் வருகையில் என் கண்கள் எல்லா உயிர்களையும் வடிகட்டுகின்றன. நல்ல வேலை, இப்போது நான் அந்த மனநிலையிலிருந்து வெளியேறி விட்டேன். ஆனாலும் இங்கு இரவில் தெருவில் நடந்து செல்லும் எந்தப் பெண்ணும் தனக்குள் பாதுகாப்பாக உணர்வதாக நான் கருதவில்லை.

-என்றார்.

இந்தப் படத்தில் நடித்து முடித்த பின், சமீபத்தில் நான் கல்யாணில் இருந்து மும்பைக்கு ஒரு டாக்சி எடுத்துக்கொண்டு பயணித்தேன், நடுவில் டிரைவர் ரிலாக்ஸ் செய்து கொள்ள காரை விட்டு இறங்கிச் சென்றார்.சற்று நேரம் அவர் காருக்குள் இல்லாத நேரத்தில், ‘யாராவது திடீரென காருக்கு உள்ளே நுழைந்தால் என்ன செய்வது?’ என்று நான் பயந்து கொண்டே இருந்தேன், அந்த பயத்துடன் நான் அடிக்கடி காருக்கு வெளியே பார்த்துக் கொண்டே இருந்தேன். சில நேரங்களில் நாம் நமது பாதுகாப்பை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதே இல்லை, இங்கு நமக்கு மோசமாக எதுவுமே நடக்காது என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால், ஒரு பெண்ணாக, நாம் எங்குமே பாதுகாப்புடன் இருப்பதாக நான் நினைக்கவில்லை. - என்று கூறும் ரித்திகா சிங் மேலும் பேசுகையில்

நான் ஒரு தற்காப்புக் கலை வீரங்கனையாக இருந்த போதும் கூட இத்திரைப்படத்தில் நடித்த அனுபவத்தைப் பெற்ற பிறகு இரவு நேரங்களில் பாதுகாப்பற்றவளாகவே உணர்கிறேன் என்கிறார்.

ஹர்ஷ் வர்தன் இயக்கியுள்ள இத்திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று மார்ச் 3 ஆம் தேதி வெளியாகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com