நெஞ்சம் மறப்பதில்லை இவரை: கிளாசிக் இயக்குநர் ஸ்ரீதர் பிறந்தநாள் இன்று!

இயக்குநர் ஸ்ரீதர்
இயக்குநர் ஸ்ரீதர்

காலம் தாண்டியும் சில படைப்புகளும்,  படைப்பாளிகளும் கொண்டாடப்படுகிறார்கள். இன்றும் மக்களால் கொண்டாடப்படும் இயக்குநராக இருப்பவர் மறைந்த இயக்குநர் ஸ்ரீதர். ஸ்ரீதர் அவர்களின் பிறந்ததினம் இன்று.

1933 ம் ஆண்டு ஜூலை 22 ம் தேதியன்று செங்கல்பட்டில் பிறந்தவர் ஸ்ரீதர்.  மாணவனாக இருந்தபோது  பள்ளியில் இவர்  எழுதிய நாடகமே பின்னாட்களில் பெரிய டைரக்டராக உருவாக காரணமாக அமைந்தது. பள்ளியில் இவர் எழுத்தில் உருவான ரத்தபாசம் என்ற நாடகத்தை பார்த்த டி. கே. சண்முகம் அவர்கள், இந்த நாடகத்தை பல இடங்களில் அரங்கேற்றுவாதாக  உறுதி அளித்தார். சொன்னது போலவே செய்தும் காட்டினார் சண்முகம். இந்த நாடகம் மூலமாக எதிர்பாராதது, அமரதீபம் படங்களில் திரைக்கதையில் வேலை செய்தார்.1959 ல் கல்யாண பரிசு படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது.

சினிமாவில் நடிப்பவர்கள் பெரும்பாலும் நாடக்கத்திலிருந்து வந்தவர்கள். நிறைய வசனங்கள் பேசி சினிமாவை நாடகம் போல் காட்டுகிறார்கள் என்ற கருத்து அப்போது இருந்தது. இதை உடைத்து அளவான வசனங்களில்  யதார்த்தமாக  ஜெமினி கணேசன், சரோஜா தேவியை கல்யாண பரிசில் நடிக்க வைத்திருப்பார் ஸ்ரீதர். இன்றும் ஏமாற்றும் பேர் வழிகளை குறிப்பிட மன்னாரன் கம்பெனி என்று குறிப்பிடுகிறோம். தங்கவேலுவின் மன்னாரன் காமெடி இன்று வரை பேசப்படுகிறது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு சித்ராலயா என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல படங்கள் தயாரித்தார்.

ஒரு அழகான, முக்கோண காதல் படமாக நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தை உருவாக்கினார். இந்திய சினிமாகளில் மிக சிறந்த காதல் பட வரிசையில் நெஞ்சில் ஓர் ஆலயத்திற்க்கு ஒரு சிறந்த இடம் உள்ளது. இப்படத்தில் இடம் பெறும் எங்கிருந்தாலும் வாழ்க பாடல் காதலில் தோற்ற பலருக்கு  மருந்தாக உள்ளது.1963 ல் சிறந்த படத்திற்க்கான விருதை இப்படம் பெற்றது.

காதலிக்க நேரமில்லை
காதலிக்க நேரமில்லை

அதன்பின்னர் ஒரு அமானுஷ்யம் கலந்த காதல் கதையாக நெஞ்சம் மறப்பதில்லை படத்தை தந்திருப்பார் ஸ்ரீதர். காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் பாலையாவிடம் சொல்லும் காமெடி இன்றும் பலரால் விரும்பப்படுகிறது.எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி, ரஜினி, கமல், கார்த்தி, விக்ரம், மோகன்  என பல பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கியவர் ஸ்ரீதர். ஹீரோ யாராக இருந்தாலும் தன்னுடைய பாணியிலான இயக்கத்தை விட்டுக் கொடுக்காதவர் ஸ்ரீதர். உரிமைக்குரலில் மட்டும் எம். ஜி. ஆர் அவர்களுக்காக தனது பாணியை கொஞ்சம் மாற்றிக்  கொண்டார்.

1991 ம் ஆண்டு  விக்ரம், ரோகினி நடிப்பில்  தந்துவிட்டேன் என்னை என்ற படத்தை இயக்கினார். இப்படம் பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பு பெறவில்லை.தமிழில் வெற்றி பெற்ற தனது படங்கள் சிலவற்றை  ஹிந்தியில் ரீமேக் செய்து பாலிவுட்டிலும் தனது முத்திரையை பதிவு செய்தார் ஸ்ரீதர். இன்றும் தலைமுறைகள் தாண்டி தொலைக்காட்சிகளில் மக்கள் விரும்பிப்பார்க்கும் படமாக உள்ளது ஸ்ரீதரின் படங்கள் உள்ளது. இளம் இயக்குநர்கள் ஸ்ரீதரின் படங்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். ஸ்ரீதரின் ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு திரைப்  பாடமே. காதல், காமெடி, மாஸ் என ஒவ்வொரு தளத்திலும் தன் முத்திரை யை பதித்த ஸ்ரீதர் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவில் கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com