
தனது காதலிக்காக ஜவான் திரைப்படத்தின் இலவச டிக்கெட்டை ரசிகர் ஒருவர் ஷாருக்கானிடம் கேட்க அதற்கு ஷாருக்கான் அளித்த பதில் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பாலிவுட் திரை உலகின் முக்கிய நட்சத்திரமாக திகழ்பவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் பல நூறு கோடிகளை வசூல் செய்து சாதனை படைப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. மேலும் இந்திய திரை உலகில் அதிகம் வசூல் ஈட்டி சாதனை படைத்து வரும் நடிகர்களில் ஒருவராகவும் ஷாருக்கான் விளங்குகிறார்.
இந்த நிலையில் அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் வெளியீட்டு விழா நெருங்குவதை தொடர்ந்து படத்தின் கதாநாயகன் ஷாருக்கான் படத்தை பல்வேறு வகையில் மார்க்கெட்டிங் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் நிகழ்வை நடத்தினார். இதில் பல்வேறு வகையான கேள்விகளை ரசிகர்கள் ஷாருக்கானிடம் முன் வைத்தனர்.
ஷாருக்கான் பெரும்பான்மையான கேள்விகளுக்கு நகைச்சுவையாகவும், ரசிகர்களினுடைய மனம் புண்படாத வகையில் பதில் அளித்தார். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் "என்னுடைய காதலிக்கு ஜவான் படத்தின் இலவச டிக்கெட் ஒன்றை வழங்க முடியுமா ?, நான் வீணாபோன காதலன்" என்று குறிப்பிட்டு கேள்வி கேட்டிருந்தார். அதற்கு ஷாருக்கான் "நான் அன்பை மட்டுமே இலவசமாக வழங்குபவன். காதலில் மலிவான நபராக நடந்து கொள்ளாதீர்கள். போய் டிக்கெட்டை வாங்கி வாங்குங்கள், காதலியை அழைத்துச் செல்லுங்கள்" என்று குறிப்பிட்டார். ஷாருக்கானின் இந்த பதில் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.