ஸ்ரீ ராமரின் ஆசி பெறுவதற்காக அயோத்தி சென்ற ‘ஹனு-மேன்' படக்குழு!
விரைவில் வெளியாகவிருக்கும் 'ஹனு-மேன்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. உற்சாகமடைந்த இயக்குநர், நாயகன் உள்ளிட்ட படக் குழுவினர், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்தனர்.
இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் படைப்பு 'ஹனு-மேன்'. இதில் நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் தயாராகி, வெளியாகவிருக்கும் முதல் பான் இந்திய திரைப்படம் இது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.
'ஹனு-மேன்' படத்தின் டீசருக்கு கிடைத்த ஆதரவால் மனம் மகிழ்ந்த பட குழுவினர், ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்திற்கு சென்றனர்.
அங்கு சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனையில் படக்குழுவினர் ஈடுபட்டனர். இவர்களின் இந்த ஆன்மீகப் பயணம், அடுத்தக்கட்ட விளம்பரத்தை தொடங்குவதற்கானது எனத் தயாரிப்புத் தரப்பு தெரிவித்திருக்கிறது.
தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், ராஜ் தீபக் ஷெட்டி, கெட்டப் சீனு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ப்ரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். இப்படத்தினை ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார்.
குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும், அஸ்ரின் ரெட்டி நிர்வாகத் தயாரிப்பாளராகவும், வெங்கட் குமார் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
தற்போது இந்தத் திரைப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.