‘ஹர்காரா’ திரைப்பட விமர்சனம்!

Harkara Movie
Harkara Movie

ன்று நாம் பயன்படுத்தும்  நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் வருவதற்கு முன்பு பெரிய அளவில் பயன்பட்டது கடிதங்கள்தான். இந்த கடிதங்களை கொண்டு வரும் தபால்காரர் சென்ற தலைமுறை வரை மிக முக்கியமாக பார்க்கப்பட்டார். நம் வாழ்வில் தவிர்க்க முடியாத மனிதராக இருந்த தபால்காரரை பற்றிய படமாக வந்துள்ளது ஹர்காரா. ஹர்காரா என்றால் தபால்காரர் என்று பொருள். 

தேனி மாவட்டத்தில் மலைகிராமத்தில் உள்ள தபால் நிலையத்தில் புதிய போஸ்ட் மேனாக வேலைக்கு சேருக்கிறார் காளி. (காளி வெங்கட் ) மக்கள் இவர் மீது அன்பு வைத்திருந்தாலும் இந்த கிராமத்தில் பணி செய்ய இவருக்கு விருப்பமில்லை. தபால் நிலையத்தை மூட கலெக்டருக்கு மனு போடுகிறார்.இந்த சூழ்நிலையில்   ஊர் பெரியவர் ஒருவர் மூலம் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலைகிராமத்தின் முதன் முதலில் வாழ்ந்த மாதேஷ்வரன் என்ற ஹர்காராவை (தபால் காரர் ) பற்றி தெரிந்து கொள்கிறார்.

இவர் யார்? இந்த முதல் ஹர்காரா செய்த விஷயம் என்ன என்பது பற்றி படம் சொல்கிறது. அதிகம் சினிமாவில் சொல்லப்படாத தபால்காரரை பற்றி சொல்லியதற்காக டைரக்டர் ராம் அருண் காஸ்ட்ரோவை பாராட்டலாம். போஸ்ட் மேன் என்பவர் கடிதம் மட்டும் தருபவர் இல்லை. மக்கள் தங்கள் வீட்டின் ஒரு ஆளாக பார்க்கிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் டைரக்டர். திரைக்கதை மெதுவாக சென்றாலும் ரசிக்க முடிகிறது. காட்சிகள் அனைத்தும் சினிமாவுக்காகான மிகைப்படுத்தல் இல்லாமல் எதார்த்தமாக உள்ளது.           

காளி வெங்கட் தமிழ் சினிமாவிற்கு  கிடைத்த  திறமையான நடிகர். நடிப்பில் நம் வீட்டிற்கு வரும் தபால் காரரை நினைவுப்படுத்துகிறார்.  டைரக்டர் ராம் அருண் காஸ்ட்ரோ 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹர்காராவாக நடித்துளார்.எடுத்துக்கொண்ட கதைக்கான நியாயத்தை சேர்த்திருக்கிறது பிலிப். R. சுந்தர் மற்றும் லோகேஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவு. கிராமத்தின் அழகும், மலையின் பிரம்மாண்டமும் கலந்து ஒரு காட்சி மேஜிக் செய்திருக்கிறார்கள்.

சினிமாவுக்கான எந்த ஒரு பூச்சுகளும் இல்லாமல் ஒரு அழகியல் படமாக வந்துள்ளது ஹர்காரா." 4 ஜி,5ஜி நுழையாத இடங்களில் கூட இந்த போஸ்ட் மேன் நுழைவான் "என்று காளி வெங்கட் சொல்லும் வசனம் இந்திய அஞ்சல் துறையின் வலிமையை காட்டுகிறது.  ஹர்காரா  படம் பார்த்தால் "சார் போஸ்ட்" என்று தபால்காரர் அழைக்கும் குரல் நம் நினைவுகளில் வந்து கொண்டிருக்கும். இந்தியாவின் பெருமை மிகு கம்பீரமான அடையாளம் அஞ்சல் துறை. இந்த அஞ்சல் துறையின் முகமாக உள்ள அஞ்சல்காரர்களுக்கு இப்படம் சமர்ப்பணம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com