"இங்கே பரபரப்புதான் தேவை" வரலக்ஷ்மி சரத்குமார்!

"இங்கே பரபரப்புதான் தேவை" வரலக்ஷ்மி சரத்குமார்!

தமிழ் ஆஹா ஒரிஜினல் வழங்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஆரவ் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் கதையான 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இரண்டு நாட்கள் முன்பு  நடைபெற்றது. இப்படத்தின் இயக்குனர்  கன்னடத்தில் பதினெட்டு படங்களை இயக்கியவர்.

நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை வரலக்‌ஷ்மி " இயக்குநர் தயாள் அவர்கள் 'கொன்றால் பாவம்' படத்தில் மூலம் தான் எத்தகைய இயக்குநர் என்பதை நிரூபித்து விட்டார். ஒரு சிறிய படமாக இருந்தாலும் அதில் கதை என்பது இருக்கும். இந்தப் படத்திலும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படியான கதை இருக்கும். ஏன் இந்தப் படத்தை பார்க்கிறோம் என்று ஒரு இடத்தில் கூட நீங்கள் நினைக்க மாட்டீர்கள். த்ரில்லர் கதையான இதை எப்படி திரைக்கதையாக உருவாக்கி படமாக எடுக்கப் போகிறார்கள் என்ற ஆச்சரியம்தான் எங்களுக்கு இருந்தது. ஆனால், அதையெல்லாம் மிகச் சரியாக எடுத்து இருக்கிறார்கள். இந்த படத்துடன் ஆஹா இணைந்திருப்பது மகிழ்ச்சி இந்த படத்தின் நடிகர்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஆரவ், அப்பொழுதுதான் பிக் பாஸில் டைட்டில் வென்று வெளியே வந்த சமயம். ஆரவ், சந்தோஷ் என நாங்கள் எல்லாம் நல்ல நண்பர்கள் என்பதாலும் இந்த படம் நான் ஒத்துக் கொள்ள ஒரு காரணம். விவேக் பற்றி சொல்ல வேண்டும் என்றால் இந்தப் படத்தில் அவர் ஒரு கண்டுபிடிப்பு. அவருக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வரவே இந்த படத்தில் அவரை நான் பரிந்துரைத்தேன். அது இயக்குநருக்கும் திருப்தி அளித்தது மகிழ்ச்சி. எங்கள் படத்தில் பெரிதாக சர்ச்சை என்பது இல்லை. இப்பொழுது எல்லாம் படத்தில் ஏதாவது ஒரு சர்ச்சை வைத்து விடுகிறார்கள். ஆனால், எங்கள் படத்தில் கதை மட்டும் தான் உள்ளது என்பதால் ஊடக நண்பர்கள் நீங்கள் தான் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தவர் திறமையை விட பரபரப்புக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது என்று கொஞ்சம் வருத்தப்பட்டார்.

கலக தலைவன் படத்தில் கொடூர வில்லனாக நடித்த பிக் பாஸ் புகழ் ஆரிவ்  'கலக தலைவன் படத்தில் வில்லனாக நடித்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் இந்த வாய்ப்பு சர்ப்ரைஸ் பேக்கேஜ் ஆக வந்தது. தயாள் சார் என்னிடம் கதை சொன்னதும், 'எப்பொழுது ஷூட்டிங்?' என்று கேட்டேன். 'அடுத்த வாரம்' என்றார். தமிழ் சினிமாவில் பொதுவாக கதை சொல்லி படப்பிடிப்பு ஆரம்பிக்க இரண்டு மாதங்கள் ஆவது ஆகும். ஆனால், இவர் சொன்னது போலவே அடுத்த வாரத்தில் படப்பிடிப்புக்கு சென்று விட்டார். 25 நாட்களில் படப்பிடிப்பு முடித்து விடுவோம் என்று சொல்லி 21 நாட்களிலேயே முடித்திருக்கிறார். டப்பிங்கில் பார்க்கும்பொழுது படம் மிகவும் நன்றாக வந்துள்ளது." என்றார். ஆஹா தமிழ் தளம் துவங்கி ஓராண்டு முடிவடைகிறது. மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் மிக முக்கிய படமாக இருக்கும் என்கிறது தயாரிப்பு  தரப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com