இந்தி சினிமா தங்களை 'பாலிவுட்' என்று அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்: மணிரத்னம்!

இந்தி சினிமா தங்களை 'பாலிவுட்' என்று அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்: மணிரத்னம்!

இயக்குனர் மணிரத்னம் தற்போது தனது இயக்கத்தில் தயாரான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியிடத் தயாராகி வருகிறார். ஏப்ரல் 19 அன்று, அவர் ஒரு குழு விவாதத்தில் கலந்து கொண்டார், அங்கு அவர் உலக சினிமாவில் தென்னிந்திய திரைப்படங்களின் முக்கிய தாக்கத்தைப் பற்றி பேசினார். சென்னையில் சிஐஐ(CII) தக்ஷின் மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் உச்சி மாநாட்டில் இந்தக் குழு நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது மணிரத்னம் பேசுகையில்,

இந்திய சினிமாவை மேற்கில் பாலிவுட் என்று குறிப்பிடுவதைப் பற்றி குறிப்பிட்ட மணிரத்னம், “இந்தி சினிமா தங்களை பாலிவுட் என்று அழைப்பதை நிறுத்தினால், மக்கள் இந்திய சினிமாவை பாலிவுட் என்று அடையாளம் காண்பதை நிறுத்திவிடுவார்கள். நான் ‘வுட்களின்(Wood)’ ரசிகன் அல்ல. அதாவது பாலிவுட், கோலிவுட் போல தனித்தனியாக அல்ல, சினிமாவை மொத்தத்தில் இந்திய சினிமாவாகவே பார்க்க வேண்டும்” என்றார் அவர்.

குழுவின் மற்ற உறுப்பினர்களில் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களான வெற்றிமாறன் மற்றும் பாசில் ஜோசப் மற்றும் நடிகர்-இயக்குனர் ரிஷப் ஷெட்டி ஆகியோரும் அதில் பங்கேற்றுப் பேசியிருந்தனர்.

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் படத்திற்கான புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஐஸ்வர்யா மற்றும் விக்ரம் 2010 ஆம் ஆண்டில் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படமான ராவணுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் பொன்னியின் செல்வன் 1&2. இவர்களைத் தவிர இப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா மற்றும் இளவரசர் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ், பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சோபிதா துலிபாலா, ஜெயராம், அஷ்வின் காக்குமானு, மோகன் ராமன், சரத்குமார் மற்றும் பார்த்திபன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான், படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத, ஒளிப்பதிவு ரவிவர்மன் உள்ளிட்டோர். முக்கியக் கதாபாத்திரங்களும், தொழில்நுட்பக் குழுவினரும் தென்னிந்திய சினிமாவின் ஸ்டார் அந்தஸ்து கொண்ட கலைஞர்கள் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகத்தான் இருக்கிறது.

1955 ஆம் ஆண்டு கல்கி எழுதிய நாவலான ‘பொன்னியின் செல்வன்’ ஐந்து பாகங்களையும் திரைக்கதை வடிவிற்கு மாற்றி இந்தக்கால ரசிகர்களையும் ஈர்க்கும் வண்ணம் எளிதாக்கி இரண்டு பாகங்களாக மணிரத்னம்

திரைப்படமாகத் தந்திருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான முதல் பாகத்தில் ஊமை ராணியாக நடித்த ஐஸ்வர்யா ராய், கடல் போரில் காயம்பட்டு கடலுக்குள் மூழ்கவிருந்த இளவரசர் அருண்மொழி வர்மனை மீட்க கடலுக்குள் நீந்திச் செல்வதோடு திரைப்படம் முடிவுக்கு வந்தது. இளவரசன் மீண்டானா? ஊமை ராணி ஏன் நந்தினியின் சாயலில் இருக்கிறார்? அவருக்கும் பூங்குழலிக்கும் என்ன உறவு? ஆதித்த கரிகாலனுக்கு என்ன ஆகவிருக்கிறது? குந்தவை, வந்தியத் தேவனின் காதல் கைகூடுமா?

சமுத்திர குமாரி பூங்குழலி, இளவரசன் அருண்மொழி வர்மன் மீது கொண்ட காதல் வெல்லுமா? அல்லது இளவரசி வானதி, பொன்னியின் செல்வர் மீது வைத்த காதல் வெல்லுமா?

ஆழ்வார்க்கடியான நம்பி யார்?

பழுவேட்டரையர், நந்தினியின் மாயையில் இருந்து மீள்வாரா? இல்லையா?

ரவிதாஸன் என்ன செய்யக் காத்திருக்கிறான்?

எல்லாக் கேள்விகளுக்குமே விடை பொன்னியின் செல்வன் பாகம் 2 ல் கிடைக்கும்.

இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

ஏப்ரல் 28 ல் பதில்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com