வில்லனும் நானே! அவனுக்கு ஹீரோவும் நானே!
2006ல் 'கலாபம்' என்ற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானாலும், தமிழில் 'ஒஸ்தி' படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் ஜான் கொக்கேன். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று வில்லனாக பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
'ஒஸ்தி'யைத் தொடர்ந்து, 'வீரம்' படத்திலும் வில்லனாக வந்திருப்பார். ஆனால் இவற்றில் ஒரு சில காட்சிகளில் மட்டும் அவர் வந்து போவதால் அவரை பலருக்கும் அடையாளம் தெரியாது.

அதன்பின், 2021ல் நடிகர் ஆர்யா நடித்து வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் தனது கர்ஜனையால் அனைவரையும் மிரட்டியது இதே ஜான் கொக்கேன்தான்.

அதைத் தொடர்ந்து, அவருக்கான மவுசும் எகிற ஆரம்பிக்கவே, 'தல' அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' படத்தில் மெயின் வில்லனாகவும் நடித்து அனைவரையும் கவர்ந்த நிலையில், தற்போது பிரபல வில்லன்கள் பட்டியலிலும் முன்னணியில் இருந்து வருகிறார்.
இவரும் பிரபல நடிகையுமான பூஜா ராமச்சந்திரனும் 2019ல் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து இவர்களுக்கு கடந்த ஏப்ரல் 29ம் தேதியன்று ஆண் குழந்தை பிறந்தது.

கியான் கொக்கேன் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தையின் புகைப்படத்தை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
அவர், புகைப்படத்தை வெளியிட்டு பகிர்ந்துள்ள பதிவில், 'மற்ற எல்லா கதைகளிலும் நான்தான் வில்லன். ஆனால் இந்த ஒரு கதையில், நான் என் மகனுக்கு ஹீரோதான்' என்று குறிப்பிட்டுள்ளார்.
படங்களில் அவர் எப்படிப்பட்ட வில்லனாக இருந்தாலும் சரி, இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது நிஜமாகவே அவர் ஒரு ஹீரோவாகத்தான் நம் கண்களிலும் தெரிகிறார்.