எனக்கு ஆஸ்கர் விருது பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது! இப்படிச் சொல்லும் கதாநாயகி யாருன்னு பாருங்களேன்!
"எனக்கு ஆஸ்கார் விருது பற்றி எல்லாம் எதுவும் தெரியாது," என்கிறார் பெல்லி.
நேற்று அறிவிக்கப்பட்ட 95 ஆவது அகாடமி விருதுகளில் "தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்" விருது வென்றதன் பின் அதன் முதன்மை கதாபாத்திரமான பெல்லியை அணுகிய ஊடகவியலாளர்களுக்குக் கிடைத்த வெள்ளந்தியான பதில் தான் இது. இது ஆவணப்படம் என்பதால் பெல்லியை ஒரு வாழும் நிஜக் கதாபாத்திரம் எனலாம்.
பெல்லிக்கு ஆஸ்கார் தான் தெரியாதே தவிர யானைகளைப் பற்றி வெகு நன்றாகத் தெரியும். கைவிடப்பட்ட யானைகளுக்குத் தான் ஒரு "வளர்ப்பு தாய் ஆக விரும்புகிறார் இவர்.
விருது வென்ற தி எலிஃபாண்ட் விஸ்பரர்ஸ் குறித்துப் பேசுகையில், "யானைகள் எங்கள் குழந்தைகளைப் போன்றவை, தாயை இழந்த ஒரு குழந்தைக்கு இதை ஒரு சிறந்த சேவையாக நாங்கள் நினைக்கிறோம்," என்று பெல்லி கூறுகிறார்.
விருதைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாவிட்டாலும் கூட, விருது குறித்துக் கேள்விப்பட்ட பின் எப்போதுமில்லாத வகையில் தங்களுக்குப் பெருகி வரும் வாழ்த்துகளை எண்ணி உற்சாகமாக இருப்பதாகக் கூறுகிறார்.
"நான் இதுபோன்ற பல யானைகளை வளர்த்துள்ளேன், அவற்றை எனது சொந்த குழந்தைகளைப் போலவே நடத்தினேன், குறிப்பாக காட்டில் தங்கள் தாயை இழந்த குட்டி யானைகளை ஒரு வளர்ப்புத் தாயாகவே மாறி நான் கவனித்து வருகிறேன்," என்று பெல்லி செய்தியாளர்களிடம் கூறினார்.
பரம்பரையாக யானைகளைக் கையாளும் மாவுத்தர்கள் வம்சாவளி பழங்குடிப் பெண்ணான தனக்கு இது ரத்தத்தில் கலந்த பழக்கம் என்றும் இதே வேலையைத்தான் எங்கள் மூதாதையர்களும் செய்து வந்தனர் என்றும் கூறினார் பெல்லி.
ஆவணப்படத்தில் அவரது நாயகனாக வெளிப்பட்டவரும் நிஜத்தில் அவரது கணவருமான பொம்மனைப் பற்றி கேட்டதற்கு, அவர் புதிதாக கடுமையான பிரச்சினையில் சிக்குண்டிருக்கும் ஒரு யானையைக் கொண்டு வர சேலம் வரை சென்றிருப்பதாகக் கூறியவர். புதிதாக வரவிருக்கும் யானைக்கு சேவை செய்ய தான் ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் மாவுத்தர்களாகப் பணிபுரியும் இந்த தம்பதியினர் ஜம்போக்களின் தேவைகளை கவனித்து வருகின்றனர்.
கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய,ஆஸ்கர் விருது வென்ற தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்", அதன் 39 நிமிட காட்சி அமைப்பில், கைவிடப்பட்ட இரண்டு யானைக் குட்டிகளான ரகு மற்றும் அமு மற்றும் அவற்றின் பராமரிப்பாளர்களான பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோருக்கு இடையே உள்ள பிரிக்க முடியாத பிணைப்பை சித்தரிக்கிறது.
விருது வெல்வதற்கு முன்பே ஓடிடி யில் ரிலீஸான நாள் முதலாகவே இந்த ஆவணப் படத்திற்கான வரவேற்பு பெரிதாகவே இருந்தது.
இதற்கிடையில், நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்கத்தின் செயலாளர் ஆல்வாஸ் இந்த விருது பழங்குடியினரின் பாரம்பரிய தொழிலுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.