"எனக்கு ஹாலிவுட் தேவையில்லை": பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் புகழ் ஜானி டெப்!

"எனக்கு ஹாலிவுட் தேவையில்லை": பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் புகழ் ஜானி டெப்!

ஜானி டெப்பை இன்று தமிழகத்தின் குக்கிராமத்தில் வாழும் குழந்தைகளுக்குக் கூட நன்றாகத் தெரிந்திருக்கிறது . காரணம் ஓடிடி யில் வெளியாகி உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களாள் பலமுறை பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் சீரிஸ் திரைப்படங்கள். அந்தப் புகழால் ஜானி டெப்புக்கு இன்று தனது கதாபாத்திரப் பெயரான “ஜாக் ஸ்பாரோ” தவிர்த்து வேறு எந்த தனியான அடையாளமும் தேவைப்படவில்லை.

எல்லாமே நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தட் ஒரு கட்டம் வரை, அது எந்தக் கட்டம் என்றால் அக்வாமேன் புகழ் நடிகை ஆம்பர் ஹெர்டுடன் விவாகரத்துக்காக நீதிமன்றப் படிகளில் ஏறும் வரை...

அதற்குப் பின் நடந்ததெல்லாம் டெப் தன் வாழ்வில் மீண்டும் திரும்பிப் பார்க்க விரும்பாத மோசமான பக்கங்கள் என்றே சொல்லலாம். தீர்ப்பு டெப்புக்கு சாதகமாகவே இருந்த போதும் அந்த மோசமான நினைவுகளில் இருந்து மீள்வது என்பது கடினமன காரியமாகவே இருந்திருக்கக் கூடும்.

ஒருபக்கம் ரசிகர்களிடையே சரிந்த மதிப்பு மிக்க புகழ்!

மறுபக்கம் ஹாலிவுட் புறக்கணிப்பு... மனைவியை அடிப்பவனை எல்லாம் வைத்துப் படமெடுக்க முடியாது என்று முகத்தில் அறைவது போலச் சொன்னவர்களை எல்லாம் டெப் சந்திக்க வேண்டியிருந்தது. இதுவரையிலும் அது குறித்தெல்லாம் பெரிதாக எதுவும் கருத்து தெரிவித்திராத நிலையில் தற்போது புதன் அன்று கேன்ஸ் திரைப்படவிழாவின் முதல் நாளிலேயே திரையிடப்பட்ட ‘ஜீன்னே டு பாரி’ எனும் தனது திரைப்படத்துக்கான செய்தியாளர் சந்திப்பில் முதன்முறையாகத் தனது மெளனத்தைக் கலைத்துள்ளார் டெப்.

ஹாலிவுட் புறக்கணிப்பை எதிர்கொள்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, சூப்பர் ஸ்டார் ஜானி டெப் சொன்ன பதில்;

முன்பே கமிட் ஆன பல்வேறு திரைப்பட புராஜெக்டுகளில் இருந்து படத்தயாரிப்பு நிறுவனங்கள் தம்மைக் கைவிட்ட போது திரைப்பட சகோதரத்துவம் தன்னை முற்றிலுமாக கைவிட்டு விட்டதாக தாம் உணர்ந்ததாக டெப் கூறினார். அத்துடன் “உங்கள் வாழ்வின் அத்தகையதொரு உணர்வுப்பூர்வமான நேரத்தில் நீங்கள் துடிப்பில்லாமல் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். இல்லை, இது எதுவுமே நடக்கவில்லை, உண்மையில் இது ஒரு வித்தியாசமான நகைச்சுவையாகும்” - என்று அதை எளிதாகக் கடக்கும் பக்குவம் எனக்கு இருந்தாக வேண்டியிருந்தது. தவிர அதைத்தாண்டி வெறும் குற்றச்சாட்டுகள் காரணமாக திரைப்படங்களில் இருந்து நீக்கப்பட்டது தனக்கு மிகுந்த வருத்தமளிப்பதாகவே இருந்தது என்றும் டெப் தெரிவித்தார்.

இருப்பினும், புறக்கணிப்பைப் பற்றி சிந்திக்காமல் தனக்குத் தானே சமாதானம் செய்ய கற்றுக்கொண்டதாக ‘சார்லி & தி சாக்லேட் ஃபேக்டரி’ ஸ்டார் கூறினார்.

மேலும் பேசுகையில், “நான் ஹாலிவுட்டைப் பற்றி நினைக்கவில்லை. எனக்கு ஹாலிவுட் அதிகம் தேவை இல்லை." என்று கூறிய டெப், தனது கடினமான காலங்களில் ஹாலிவுட் தன்னிடம் நடந்து கொண்ட முறைகளைக் காட்டிலும் தனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது ஊடகங்களின் போக்கு தான் என்று குறிப்பிடத் தவறவில்லை.

தன்னைப் பற்றி மிகைப்படுத்தப்பட்ட கற்பனையான செய்திகளை எழுதி தவறான தகவல்களை பரப்பியதாக அவர் ஊடகங்களைக் குற்றம் சாட்டினார். "என்னையும் என் வாழ்க்கையையும் பொறுத்தமட்டில், நீங்கள் படித்தவற்றில் பெரும்பாலானவை அற்புதமாக, பயங்கரமாக எழுதப்பட்ட புனைகதைகள்." என்கிறார் டெப்.

கடந்து போன மோசமான 4 ஆண்டுகளின் பின் இப்போது கேன்ஸ் திரைப்பட விழாவின் முதல்நாளில் டெப்பின் முதல் பொதுத் தோற்றம் நிகழ்ந்திருக்கிறது.

இதை அவரது மறுபிரவேசப் படம் என்றே சொல்லலாம்.

பீரியட் டிராமாவான ‘ஜீன்னே டு பாரி’ கேன்ஸ் திரைப்பட விழாவில் உற்சாகமான வரவேற்பைப் பெற்றது.

திரைப்படத்தில், அவர் பிரான்சின் முன்னாள் மன்னர் லூயிஸ் XV வேடத்தை ஏற்று நடித்திருக்கிறார். கேன்ஸில் திரையிடப்பட்ட பிறகு, படம் பலத்த கரகோஷத்துடன் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட டெப், கண்ணீருடன் தோன்றிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com