எனக்கு காதல் வேண்டாம்... க்ரைம் கதைதான் வேண்டும் - அடம்பிடித்த உதயநிதி

எனக்கு காதல் வேண்டாம்... க்ரைம் கதைதான் வேண்டும் - அடம்பிடித்த உதயநிதி

மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் படம் “கண்ணை நம்பாதே”. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இப்படம் தயாராகி வருகிறது. படம் குறித்து மனம் திறக்கிறார் இயக்குநர் மு.மாறன்.

அறிமுக இயக்குனர் மு.மாறன் எழுதி இயக்கியிருந்த “இரவுக்கு ஆயிரம் கண்கள்“ 2018 இல் வெளிவந்த த்ரில்லர் படம் . இதில் கால் டாக்சி டிரைவராக அருள்நிதி நடித்திருந்தார். தன் முதல் படத்திலேயே கொஞ்சம் சிக்கலான த்ரில்லர் கதையை எடுத்துக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றார். காட்சிக்குக் காட்சி அடுத்தடுத்து திருப்புமுனைகள் வரும்படி இருந்ததால் படம் விறுவிறுப்பாக இருந்தது. த்ரில்லர் படமாக வெளியாகி வெற்றிப் பெற்றது.

“இரவுக்கு ஆயிரம் கண்கள்” படத்தை அடுத்து மு.மாறன் இயக்கியுள்ள படம், 'கண்ணை நம்பாதே'. இதில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார்.

படம் குறித்து இயக்குநர் மு.மாறன் கூறியதாவது:

என் முதல் படமான “இரவுக்கு ஆயிரம் கண்கள்“ படத்தைப் பார்த்துவிட்டு உதயநிதி என்னைப் பாராட்டினார். மிகவும் பிடித்திருந்ததாக கூறினார். வாய்ப்பு கிடைக்கும்போது நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்றார். அவர் சொன்னபடியே வாய்ப்பு வந்தது. பூஜையுடம் படப்பிடிப்பு தொடங்கியது. விறுவிறுப்பாக படிப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கும்போது நடுவே கொரோனா வந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. நீண்ட இடைவெளி ஆகிவிட்டது. இன்னும் 20 சதவிகித காட்சிகள் படமாக்கப்பட வேண்டி உள்ளது. அதையும் முடித்து அடுத்த மாதம் திரைக்கு கொண்டுவர இருக்கிறோம்.

உதயநிதியிடம் முதலில் காதல் கதை ஒன்றைச் சொன்னேன். 'கதை நன்றாக இருக்கிறது. இப்போது எனக்கு காதல் கதை வேண்டாம், கிரைம் கதை இருந்தால் சொல்லுங்கள்' என்றார்.

சொன்னேன். பிடித்திருந்தது. அப்படித்தான் தொடங்கினோம். இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருந்ததால் 'கண்ணை நம்பாதே' என்று தலைப்பு வைத்தோம்.

இப்படம் முழுமுழுக்க கிரைம் த்ரில்லர் படம். ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும் அப்பாவி, அதில் இருந்து எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் கதை.

எப்படி பொருந்துகிறது என்பது படம் பார்க்கும்போது புரியும். திரைக்கதை பரபரப்பாக இருக்கும். படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். எல்லோருக்குமே முக்கியத்துவம் இருக்கும். 80% கதை இரவில் நடக்கும். இரண்டாம் பாதி முழுவதும் ஓரே இரவில் நடப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. மார்ச் மாதம் படம் வெளியாகும் என்றார் இப்படத்தின் இயக்குநர் மு.மாறன்.

மேலும் இப்படத்தில் ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா உட்பட பலர் நடித்துள்ளனர். சித்துக்குமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் தயாரிக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com