வரலாற்றுப் பின்னணி கொண்ட புதிய ஆவணப்படங்களுக்கு வழிகோலுமா பொன்னியின் செல்வன் 1& 2 திரைப்படங்கள்!
நேற்று மாலையில் கல்கி எழுதிய ”பொன்னியின் செல்வன்” நாவல் மற்றும் மணிரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன் 1&2 ” திரைப்படம் இரண்டையும் ஒப்புமைப் படுத்தி வாசகர்கள் கருத்தை முன்வைக்கும் விவாத நிகழ்வு ஒன்று கல்கி ஆன்லைன் காணொளிப் பிரிவுக்காக நடந்து முடிந்தது. அதில் பங்கு கொண்டு பேசிய இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துகளில் இருந்து சோழ வரலாறு குறித்து மேலும் பல புதிய திறப்புகள் முன்னெடுக்கப்படலாம் என்று தோன்றுகிறது. அதற்கான முனைப்பும், தொழில்நுட்ப வசதிகளும் இன்று அதிகம். ஆகவே இந்த திரைப்படத்தின் வாயிலாக அப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்தாலும் அதை நாம் வரவேற்கலாம்.
ஆவணப்பட உலகில் வரலாற்று ஆய்வுகளுக்கும், ஆய்வை முன்னிறுத்தும் தெளிவான படைப்புகளுக்கும் எப்போதுமே மிகுந்த வரவேற்பு உண்டு. அதற்கு சமீபத்திய உதாரணம் “தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப் படம். தாயை இழந்து காட்டுக்குள் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட யானைக்குட்டி ஒன்றை பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்ட பொம்மன் மற்றும் பெல்லி தம்பதியினர் எவ்விதமாக பெற்ற குழந்தை போலப் பாவித்து வளர்க்கிறார்கள் என விரியும் அந்த ஆவணப்படம். அந்தப் படம் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவணப்படப் பிரிவில் விருது வென்றது .
இங்கு பல்லாயிரக்கணக்கான படைப்பூக்கம் கொண்ட இளைய தலைமுறையினருக்கு பல்வேறு புதிய தீம்களை எடுத்துக் கொண்டு ஆவணப்படங்களை உருவாக்குவதற்கான பலமிக்கதோர் நம்பிக்கையை விதைத்திருக்கிறது.
நேற்றைய நிகழ்வுக்கு வருகிறேன். அதில் கலந்து கொண்டு பேசிய இரு கல்லூரி மாணவர்கள் பொன்னியின் செல்வன் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அவர்களுக்கு சோழர் காலத்தில் கட்டப்பட்ட கலைநயம் மிக்க சிவாலயங்கள் ஏன் கிஞ்சித்தும் படத்தில் காட்டப்படவில்லை என்ற கேள்வி இருந்தது? திரைப்படத்தில் வடநாட்டு அரண்மனைகள் காட்டப்பட்டது நியாயமில்லை எனும் விமர்சனம் இருந்தது.
தனக்கு தகுதி இருந்தும், குடிமக்களின் ஏகோபித்த வரவேற்பு இருந்தும் இளவரசன் அருள்மொழி வர்மன் எதற்காக சோழ மகுடத்தை சிற்றப்பா மதுராந்தக உத்தம சோழனுக்கு விட்டுத்தர வேண்டும்? எனும் குழப்பம் இருந்தது. திரைப்படத்தில் வரலாற்றைத் திரித்து விட்டார்கள் எனும் சினம் இருந்தது.
கல்கி தனது நாவலில் படைத்திருந்த சேந்தன் அமுதன், மணிமேகலை, மந்தாகினி தேவி, போன்ற கதாபாத்திரங்களுக்கு திரைக்கதையில் போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லையே என்கிற ஆதங்கம் இருந்தது.
சோழ வரலாற்றில் மும்முடி கண்ட பிரம்மராயரான முதலமைச்சர் அனிருத்த பிரம்மராயருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. அவரை திரைப்படத்தில் ஒப்புக் சப்பாணியாக்கி விட்டார்களே, என்ற கோபம் இருந்தது.
படத்தில் ஆதித்த கரிகாலன் கொலையை பிரதானமாக்கி இருப்பதெல்லாம் சரி தான். அது தான் கதை முடிச்சு என்ற போதும் ஆதித்தன், நந்தினி காதலைக் காட்டிய அளவில் கொஞ்சமேனும் அன்றைய சோழ தேச மக்களின் வாழ்க்கைமுறை, உணவு, வீரம், பண்பாடு, குறித்தெல்லாம் பிரத்யேகமாக காட்சிகள் ஏதும் இடம்பெறவில்லையே எனும் கேள்விகள் நிறைய இருந்தன.
அவர்கள் கேள்விகள் கேட்க கேட்க எனக்குத் தோன்றியதெல்லாம் ஆங்கிலத்தில் வரலாற்றுப் பின்னணியில் நிறைய வெப் சீரிஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன. காலனிய பிரதிநிதித்துவ அரசாட்சி முறையில் அன்றைய (தோராயமாக 1700, 1800 களில் ) இங்கிலாந்தில் பிரபுக்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது? என்பதைத் தழுவி பிரிஜர்ட்டன், என்றொரு வெப்சீரிஸ்,
பிறக்கும் போதே அரசியாகப் பட்டம் சூட்டப்பட்ட மேரி “தி குயின் ஆஃப் ஸ்காட்லாந்த்” தின் வாழ்க்கையைப் பற்றி விரிவாக அலசும் “ரைன்” எனும் வெப்சீரிஸ்.
பவாரியாவின் அரசி எலிஸபெத் குறித்து அவளது பெயரிலேயே ஒரு வெப் சீரிஸ்.
என வெற்றிகரமாக ரசிகர்களால் விரும்பத்தக்க வகையில் நிறைய தொடர்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் அதை குறிப்பிட்ட கால இடைவெளியில் சீசன்களாகப் பிரித்து ஓடிடி தளங்களில் ஒளிபரப்புகிறார்கள்.
நாம் பிறந்திருக்காத ஒரு காலகட்டத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளும் முனைப்பு நடுவில் சில காலங்களாக வெகுஜன மத்தியில் மழுங்கி இருந்தது. அவர்களை எல்லாம் மீண்டும் வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்களாக மாற்ற, அதற்கான தேடல் கொண்டவர்களாக மாற்ற இது போன்ற வெப் சீரிஸ்கள் உதவுகின்றன.
இதில் உண்மை எத்தனை சதவிகிதம்? கற்பனை எத்தனை சதவிகிதம் என்பது குறித்த தேடலும் தற்போது ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.
எகிப்தில் டூடங்காமன் என்றொரு மன்னர் இருந்தார். 10 வயதில் தந்தை இறப்புக்குப்பின் பதவி ஏற்ற டூடங்காமன் 19 வயதிலெயே மரணத்தை தழுவினார் என்கிறது வரலாறு. ஆஃப்ரிக்க மன்னர் பரம்பரை வழக்கப்படி கணக்கிலடங்காத பொக்கிஷங்களுடன் டூடங்காமனின் சடலம் மம்மியாக்கப்பட்டு புதைக்கப்பட்டது. இந்த நூற்றாண்டில் தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் அந்த பொக்கிஷத்தை கண்டறிந்த பிறகு தான் தெரிய வந்தது, உலகில் இதுவரை
கண்டறியப்பட்ட பொக்கிஷங்களில் இது தான் விலமதிப்பிடவே முடியாத அளவுக்கு மிகப்பெரியது என. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இது குறித்த ஆவணப்படம் இருக்கிறது. இதை ஆர்வமாகப் பார்ப்பதற்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த ஆவணப்படத்தை நாங்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் கண்டோம். பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட போது ஒருநாள் மகள் வெகு ஆர்வத்துடன் என்னிடம், “அம்மா, நம்ம பார்த்த டாக்குமெண்டரி மூவி எனக்கு லெவன்த் இங்லீஷ் சிலபஸ்ல பாடமா இருக்கும்மா. எனக்கு சர்ப்பிரைஸா இருந்துச்சு” என்றாள்.
அதைத் தொடர்ந்து அவளுக்கு மேலும் டாக்குமெண்டரி படங்கள் பார்க்கும் ஆவலும் பெருகியது. ஆக, இது போன்ற படங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஏதேனும் ஒருவகையில் மேலும் அவற்றைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டச் செய்வதாகவே அமைந்திருக்கின்றன என்று நினைத்துக் கொண்டேன் நான்.
பொன்னியின் செல்வனிலும் அதுவே நிகழ்ந்தால் நலம்.
படத்தில் மட்டுமல்ல 70 ஆண்டுகளுக்கு முன் நாவலிலும் கூட பாண்டியர்களை மிகவும் அவமானப்படுத்தி விட்டார்கள் என்று ஒருசாரர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். குறைந்த பட்சம் அதை முன் வைத்து எந்த வகையில்அந்த அவமானம் நிகழ்ந்தது என யோசித்து அதன் பின்னணியில் சிறுகதைகளாவது வெளிவந்தால் சந்தோஷமாக இருக்கும். இருட்டடிக்கப்பட்ட பாண்டிய வரலாறு குறித்து மேலும் ஆய்வுகள் பெருகி அதைக் குறித்த விவாதங்கள் வளர பொன்னியின் செல்வன் உதவட்டும்.
வீரபாண்டியன் மகனுக்கா பட்டம் கட்டுவது? என்றொரு பக்கம் சிலர் புதிதாகக் கிளம்பி இருக்கிறார்கள். மதுராந்தக உத்தம சோழன், செம்பியன் மாதேவியின் ரத்தத்தில் உதித்தவனா? என்றொரு சந்தேகம் எப்போதும் இருந்து வருவது தான். அரிஞ்சய சோழருக்குப் பின் சோழ வரலாற்றில் இருண்டகாலம் நிலவியது என வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அதைக்குறித்தும் மேலும் ஆய்வுகள் நிகழ்த்தப்படலாம்.
அம்மன்குடி எனும் ஊரில் பிறந்து ஒட்டுமொத்த சோழ தேசத்துக்கும் முதன் மந்திரியாக இருந்த அனிருத்த பிரம்மராயர் எழுப்பிய துர்க்கை ஆலயம் இப்போதும் அந்த ஊரில் உண்டு என்கிறார்கள். அவரைப் பற்றி மட்டுமே தனியாக ஒரு ஆவணப்படம் எடுக்கலாம் எனும் அளவுக்கு மிகச்சிறந்த நிர்வாகியாகவும், ராஜதந்திரியாகவும் அவர் செயல்பட்டிருக்கிறார். அதற்கு சரித்திரச் சான்றுகளும் உண்டு.
இப்படி சரித்திரம் சார்ந்து பல கேள்விகளையும், தேடல்களையும் தந்துள்ள இந்த வரலாற்றுப் பின்னணி கொண்ட திரைப்படமானது புதிய பல ஆவணப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களுக்கு வழிகோலுமானால் அது முற்றிலும் ஆரோக்யமான விஷயம்தான் இல்லையா?