ராஷ்மிகா நடிப்பை குறை கூறியதாக பரவிய விஷயம்! விளக்கமளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் இவர், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பு குறித்து குறை கூறியதாக ஒரு தகவல் பரவிவந்த நிலையில், தற்போது அதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
'வட சென்னை', 'கபெ ரணசிங்கம்', 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' என வெற்றிப்படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஃபர்ஹானா' திரைப்படம் ஒருபக்கம் சில பிரச்னைகளை கிளப்பினாலும், மறுபக்கம் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பிற்கு பாராட்டும் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, 'புஷ்பா' படத்தில் தான் நடித்திருந்தால், ஸ்ரீவள்ளி ரோலில் ராஷ்மிகாவை விட சிறப்பாக நடித்திருப்பேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாகவும், அவர் ராஷ்மிகா மந்தனாவின் உழைப்பை குறை கூறியதாகவும் தகவல் ஒன்று, கடந்த சில நாட்களாக இணையத்தில் பரவி வந்தது.
இதைத் தொடர்ந்து, இந்த விஷயம் தொடர்பாக, தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கமளித்துள்ளார். அதில்...
சமீபத்திய நேர்காணலின் போது, 'தெலுங்கு திரையுலகில் நீங்கள் எந்தமாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று தன்னிடம் கேட்கப்பட்டதற்கு, 'எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன். உதராணத்திற்கு 'புஷ்பா'வில் வரும் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும்' என்று கூறியிருந்தேன்.
இவ்வாறு நான் கூறிய பதில், துரதிர்ஷ்டவசமாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. 'புஷ்பா' படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒரு போதும் குறை கூறவில்லை.
ராஷ்மிகா மந்தானாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு. அதனால் இந்த விஷயத்தை தெளிவுபடுத்திக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். இதன்மூலம் அவர் இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.