
மொழிகள் புரியாவிட்டாலும் தென்னிந்திய படங்களுக்கு நான் ரசிகன் என்று ஜவான் திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஷாருக்கான் பேசி உள்ளார்.
அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப் பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது ஜவான் திரைப்படம். இத்திரைப்படம் 750 கோடி ரூபாய் வரை தற்போது வசூலித்து உள்ளது என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் அட்லீ, நடிகர்கள் ஷாருக்கான், விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் நயன்தாரா வீடியோ கால் வழியாக தனது கருத்தை பதிவு செய்தார்.
இதைதொடர்ந்து படத்தின் கதாநாயகன் ஷாருக்கான் பேசுகையில், ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. நேர்மையாக இருக்கும் ஒவ்வொரு இந்தியர்களும் ஜவான் தான். ஜவான் திரைப்படம் 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவர வேண்டியது. கொரோனா காரணமாக காலதாமதம் ஏற்பட்டது.
இதனால் நான்கு ஆண்டுகள் தென்னிந்தியாவை சேர்ந்த பல பணியாளர்கள் மும்பையிலேயே தங்கி இரவு, பகல் பாராமல் உழைத்தார்கள். பலரும் குழந்தைகள், குடும்பம் என்று யாரையும் பார்க்காமல் மும்பையிலேயே தங்கியிருந்தார்கள். அதில் அட்லீயும் ஒருவர். அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க வேண்டும்.
எனக்கு தென்னிந்திய படங்கள் பிடிக்கும். மொழிகள் புரியாவிட்டாலும் தென்னிந்திய பாடங்களுக்கு நான் ரசிகன். தற்போது சப்டைட்டில், டப்பிங் மூலமாக ஜவான் திரைப்படத்தை இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் பார்த்து இருக்கின்றனர். இதுவே படத்தினுடைய வெற்றிக்கு முக்கிய காரணம். கடவுளின் கருணையால் என்னுடைய படங்கள் வெற்றி பெறுகின்றன என்று தெரிவித்தார்.