பிரம்மாண்ட லுக்கில் ஜூனியர் 'என்டிஆர் 30'! டைட்டில் மற்றும் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
கடந்த ஆண்டு மார்ச் 25 அன்று, பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் தயாரான இப்படம் அனைத்து ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு, உலகெங்கும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
இப்படத்திற்குப் பின் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் இருவரின் நடிப்பில் அடுத்து எந்த படம் வெளியாகும் என ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பும் நிலவிவந்தது.
இதையடுத்து தற்போது ஷங்கரின் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக கொரடலா சிவா படத்தில் நடித்து வருகிறார். இவர் ஏற்கெனவே 'ஸ்ரீமந்துடு', 'பரத் எனும் நான்', 'ஆச்சார்யா' உட்பட வெற்றிப்படங்களை இயக்கியவர் ஆவார்.
இந்நிலையில், ஜூனியர் என்.டி.ஆர். தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, இன்று தனது பிறந்தநாளையொட்டி, இப்படத்தின் டைட்டிலை போஸ்டருடன் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 'என்டிஆர் 30' திரைப்படம் 'தேவாரா' என்று பெயரிடப்பட்டுள்ளது. போஸ்டரைப் பார்க்கும் போதே ஒரு பயங்கரமான தோற்றத்துடன், கையில் ஆயுதத்துடன், கடல் பாறை மீது ஜூனியர் என்டிஆர் நிற்க, கீழே பலர் மடிந்துகிடக்கின்றனர்.
இந்த போஸ்டரைப் பார்க்கும்போதும், 'தேவாரா' என்ற வித்தியாச தலைப்பும், ஜூனியர் என்.டி.ஆரின் தோற்றமும் ரசிகர்களை வியப்புடன் பார்க்க வைத்துள்ளது.
இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ள நிலையில், யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் பேனர்களின் கீழ் மிக்கிலினேனி சுதாகர் மற்றும் ஹரி கிருஷ்ணா கே இப்படத்தை தயாரிக்க, அனிருத் இசையமைப்பில் உருவாகிவரும் இப்படம், அடுத்தாண்டு ஏப்ரல் 5ம் தேதி வெளியாகிறது.
'RRR' படத்திற்குப் பிறகு, ஜூனியர் என்டிஆருக்கு இந்திய அளவில் அதிக ரசிகர்கள் கிடைத்துள்ள நிலையில் அவரது அடுத்த படமான 'தேவாரா' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.