கன்னட தொலைக்காட்சி நடிகர் சம்பத் ஜே ராம் மரணம்!
கன்னட தொலைக்காட்சி நடிகர் சம்பத் ஜே ராம் பெங்களூரு நெலமங்கலாவில் உள்ள அவரது வீட்டில் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். அவருக்கு வயது 35.
நடிகர் 'அக்னிசாக்ஷி' மற்றும் 'ஸ்ரீ பாலாஜி போட்டோ ஸ்டுடியோ' போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
சம்பத் ஜே ராமின் நண்பரும் நடிகருமான ராஜேஷ் துருவா, சம்பத்தின் மரணச் செய்தியை ஃபேஸ்புக் பதிவு மூலமாக உறுதி செய்துள்ளார்.
கன்னடத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட பதிவில், "உங்கள் பிரிவைத் தாங்கும் சக்தி எங்களிடம் இல்லை. நீங்கள் நடிக்க வேண்டிய இன்னும் பல திரைப்படங்கள் உருவாகவில்லை. உங்கள் கனவுகளை நனவாக்க இன்னும் நிறைய நேரம் உள்ளது. நாங்கள் இன்னும் பெரிய மேடையில் உங்களைப் பார்க்க வேண்டும். தயவுசெய்து திரும்பி வாருங்கள்." எனும் இரங்கல் பதிவை மிகுந்த வருத்தத்துடன் முகநூலில் அவர் பகிர்ந்திருந்தார்.
போதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்படாததால் திரு ராம் வருத்தமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர் சம்பத் ஜெயராமின் அக்னிசாக்ஷி இணை நடிகர் விஜய் சூர்யா, நடிகர் நல்ல வாய்ப்புகளுக்காக நெடுங்காலமாகக் காத்திருந்ததாகக் கூறினார்.
"அவரது வாழ்க்கையில் இது போன்ற எதுவும் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர் நடிகராக நல்ல வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவர் தனது கேரியரில் உயர விரும்பினார், மிகவும் லட்சியமிக்க நடிகராக இருந்தார்" என்று சூர்யா கன்னட ஊடகங்களிடம் கூறினார்.
அவரது இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான என்.ஆர்.புரத்தில் நேற்று நடந்தது.