இயக்குனர் ராஜமுருகன் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படத்தினுடைய புதிய தகவலை படத்தினுடைய தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதில் டப்பிங்கை தீபாவளிக்கு பிறகு வைத்துக் கொள்ளலாமா என்று இயக்குனர் ராஜமுருகன் நடிகர் கார்த்தியை கலாய்ப்பது போன்று வெளியாகி உள்ளது.
ஜோக்கர், ஜிப்ஸி போன்ற திரைப்படங்கள் இயக்கிய இயக்குனர் ராஜமுருகன் நடிகர் கார்த்தியுடன் இணைந்து ஜப்பான் என்ற புதிய திரைப்படத்தை உருவாக்கி உள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து முடிந்துள்ளது. தற்போது படத்தினுடைய இறுதிக்கட்ட எடிட்டிங் ஒர்க், டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதே சமயம் இயக்குனர் ராஜமுருகனின் கதைகள் சமூக நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக இருக்கும் என்பதாலும், கதைக்கு அதிக முக்கியத்துவம் தருபவர் என்பதாலும் இவரின் படம் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். தற்போது நடிகர் கார்த்தி உடன் இயக்குனர் ராஜமுருகன் இணைந்து இருப்பதால் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படத்தை வரும் தீபாவளி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கின்றது.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் ஜப்பான் திரைப்படத்திற்கு நடிகர் கார்த்தி டப்பிங் கொடுத்து வரும் வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் படத்தில் வரும் ஒரு வசனத்திற்கு டப்பிங் கொடுக்கும் கார்த்தி சரியாக கொடுக்கவில்லை என்று இயக்குனர் மீண்டும் மீண்டும் ஒன்ஸ்மோர் செய்ய சொல்கிறார். இதை அடுத்து இயக்குனர் ராஜமுருகன் வேண்டுமென்றால் தீபாவளிக்கு பிறகு டப்பிங் வைத்துக் கொள்ளலாமா என்று நடிகர் கார்த்தியை கலாய்க்க. உடனே "இப்ப வரும் சார்" என்று சொல்லி "கருமோனா என்னனு தெரியுமாடா உனக்கு. நீ இதுவரை அடிச்சு கொன்ன கொசுவெல்லாம், டைனோசரா மாறி உன் முன்னாடி வரும்" என்று மாசாக பேசி டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார்.
மேலும் ஜப்பான் திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில், இயக்குனர் விஜய் மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். உண்மை கதையின் அடிப்படையில் இப்படம் உருவாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.