மஞ்சள் லாரியின் மகத்தான சரித்திரம் ‘விஜயானந்த்’

மஞ்சள் லாரியின் மகத்தான சரித்திரம் ‘விஜயானந்த்’

சாலை மார்க்கமாக பொருட்கள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகனப் போக்குவரத்து நிறுவனமான, ‘வி ஆர் எல்’ உரிமையாளர் பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தயாராகியிருக்கும் திரைப்படம், 'விஜயானந்த்.' கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் ஒன்பதாம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாகிறது.

‘ட்ரங்க்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். நடிகர் நிஹால் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீலதா பிரகலாத், பரத் போப்பண்ணா, அனந்த் நாக், வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு, கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்தப் படத்தை வி ஆர் எல் ஃபிலிம் புரொடக் ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர் தயாரித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் ரிஷிகா சர்மா பேசுகையில், ''நான்கு தலைமுறையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான உணர்வுகளை விவரிக்கும் கதைக்களமாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் மூத்த உறுப்பினர்களுக்கும், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இடையேயான பாசப் பிணப்பை மையப்படுத்தி இருந்தாலும், பிள்ளைகளின் எதிர்கால கனவுகளுக்கும், அவர்களின் எதிர்கால கனவுத்திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை இந்தப் படத்தில் வலியுறுத்தியிருக்கிறோம்'' என்றார்.

பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா மதுரகவி பேசுகையில், ''மஞ்சள் வண்ண லாரியின்‌ மகத்தான சரித்திரம்தான் இந்தப் படத்தின் கதை. ‘கே ஜி எஃப்’ படத்தைப் போல் இது கமர்சியல் படமல்ல. நிஜ நாயகனை பற்றியப் படம். வியாபாரமும், அரசியலும் ஆதிக்கம் செலுத்தும் இந்த மண்ணில், யதார்த்தமான வாழ்க்கையை முன்னிறுத்தி, குடும்ப உறவுகளுக்கான முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனும் நோக்கத்தில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவை படத்தில் இயல்பாக இடம் பெற்றிருக்கிறது. வாழ்க்கையில் எப்படி ஜெயிப்பது? என்று தெரியாமல், தன்னம்பிக்கை இழந்திருப்பவர்களுக்கு இந்தப் படம் மிகப்பெரிய முன்னுதாரணமாக இருக்கும். வாழ்க்கையின் அடித்தளத்திலிருந்து ஒருவர் எப்படி வென்றார் என்பதைச் சொல்லும் கதையாக இது தயாராகியிருக்கிறது.  வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு இந்தப் படத்தில் நிறைய செய்திகள் இருக்கிறது'' என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com