சூப்பர் ஸ்டாருக்கு ஹிட் படம் கொடுத்த மனோபாலா!
நகைச்சுவை நடிகராக மனோபாலாவை 100க்கும் மேற்பட்ட படங்களில் பார்த்துள்ளோம். ஆனால் வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ஒரு இயக்குநராக, குணச்சித்திர நடிகராக என பல திறமைகளுடன் திரையுலகில் வலம் வந்தவர்தான் மனோபாலா.
அவர் 1994ல் வெளிவந்த 'தாய்மாமன்' படத்தில் முதன்முறையாக அவர் நடிக்க ஆரம்பித்து, 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.
ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் ஒரு இயக்குநராகத்தான் திரையில் அறிமுகமானார். 'ஆகாய கங்கை' என்ற படத்தின் மூலம் 1982ம் ஆண்டு முதன்முதலாக இயக்குநராக அறிமுகமானார். காதலை மையப்படுத்தி உருவான இப்படத்தில் கதாநாயகனாக கார்த்திக், சுஹாசினி நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
அதோடு, விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்', சத்யராஜ் நடித்த 'மல்லுவேட்டி மைனர்', மோகன் நடித்த 'பிள்ளைநிலா' உட்பட 20 படங்களை இயக்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 1987ல் வெளியான 'ஊர்க்காவலன்' திரைப்படத்தை இயக்கியதும் மனோபாலாதான்.

இப்படத்தில், ரஜினிகாந்த், பாண்டியன், ரகுவரன், மலேசியா வாசுதேவன், ராதிகா என பல பிரபலங்களும் நடித்திருந்த இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார்.
இப்படத்தில், காங்கேயனாக வரும் ரஜினிகாந்த்தின் தம்பி ஒரு பணக்கார பெண்ணைத் திருமணம் செய்யும் நிலையில், அவர் தந்திரமாக கொலை செய்யப்படுகிறார். இந்நிலையில் தனது சகோதரனின் கொலைக்கு நீதி கேட்டும், தனது தம்பியை திருமணம் செய்ததால், அவனை இழந்து தவிக்கும் அபலை பெண்ணுக்காக போராடும் மனிதராகவும் ஒரு அருமையான கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
இப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமல்லாமல், இத்திரைப்படம், 'கஞ்சுகோட்டகு மோனகடு' என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாறறமும் செய்யப்பட்டது.
இப்படம் மட்டுமல்ல... மனோபாலா இயக்கத்தில் பல படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.