வடபழனி மயானத்தில் மயில்சாமி உடல் தகனம்!
வடபழனி ஏ வி எம் மயானம் வந்தடைந்தது நடிகர் மயில்சாமியின் உடல். இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் எனும் சொல் வழக்குக்கு ஏற்ப நடிகர் மயில்சாமி மறைவு குறித்து நேற்று முதல் சக நடிகர்கள், நண்பர்கள் முதல் அவரால் பயன் பெற்ற அத்தனை பேரும் பகிர்ந்து கொள்ளும் துக்கச் செய்திகள் நெகிழ்ச்சி அடையச் செய்வதாக இருக்கின்றன.
சமூகத்தில் தன்னைச் சுற்றி இருந்த சகலருக்கும் உதவ வேண்டும் எனும் கொள்கையுடன் வாழ்ந்து மறைந்த மயில்சாமியின் பூத உடல் வழபழனி மயானத்தில் இறுதிச் சடங்குகளுக்காக எடுத்துச் செல்லப்பட்ட போது , தீவிர எம் ஜி ஆர் ரசிகரான மயில்சாமிக்கு அவரது ரசிகர்கள் எம்ஜிஆர் பாடல்களைப் பாடிச் சென்று இறுதி மரியாதை செலுத்தினர். தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்ட உடலைச் சுற்றிலும் கண்ணீருடன் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.
மயில்சாமியின் சேவை மனப்பான்மை மக்கள் மனதிலிருந்து எப்போதும் நீங்காது என்பதற்கு கடந்த இரு தினங்களாக மக்கள் அவரைப் பற்றி கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட காட்சிகளே சாட்சி.
தீவிர சிவபக்தரான மயில்சாமி, சிவராத்திரி அன்று எதிர்பாராமல் திடீரென உயிரிழந்ததை சிவன் அவரை அழைத்துக் கொண்டார். அவர் கடவுளுடன் ஒன்றாகக் கலந்து விட்டார் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் சக நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்.
மயில்சாமியின் சேவை மனப்பான்மைக்கு மரியாதை செலுத்தும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கூடுதலாக மயில்சாமியின் இறுதி ஆசையை நிறைவேற்றுவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
நடிகர்கள் ராதாரவி மனோபாலா, செந்தில், கிரண் மனோகர், டிரம்ஸ் கலைஞர் சிவமணி உள்ளிட்ட அனைத்து சக நடிகர்களும், நண்பர்களும் நேற்று முதல் மிகுந்த துக்கத்துடன் மயில்சாமியுடனான தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
‘இப்படி ஒரு மனிதனை இனி பார்க்கவே முடியாது. வாரம் ஒரு முறை என்னுடன் பேசி விடுவான். யாருக்காவது உதவி தேவை என்றால், உடனே என்னை அழைத்து, சத்யராஜ் சார் இவ்வளவு தொகை வேணும், இந்தப் பையனுக்கு ஃபீஸ் கட்டனும் உடனே கொடுத்து அனுப்புங்க சார்’ என்று உரிமையாகக் கேட்டு அனுப்புவான்.. 57 வயசெல்லாம் சாகிற வயசா?! ’ - என்று மயில்சாமி குறித்துப் பேசுகையில் தேம்பி அழுகிறார் நடிகர் சத்யராஜ்.
மயில்சாமியின் சம்பந்தியும், தமிழக சட்ட சபை துணை சபாநாயகருமான பிச்சாண்டி அவர்கள் மயில்சாமிக்கு இறுதி மரியாதை செலுத்த, மூத்த மகன் அன்பு இறுதிச் சடங்குகள் செய்ய உடல் தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கன்னிராசி திரைப்படத்தில் பலசரக்கு சாமான்களைச் சுமந்து கொண்டு வரும் சிறு வேடத்தில் தொடங்கி மயில்சாமி நடித்த அத்தனை நகைச்சுவைக் காட்சிகளுமே அவரது ரசிகர்களால் என்றும் நினைவு கொள்ளத்தக்கவையே.
மயில்சாமியை இனி பார்க்கவே முடியாது எனும் நிஜத்தை ஏற்றுக் கொள்ள மனமின்றி அவரது ரசிகர்களும், அவரால் பயன்பெற்ற சாமனிய மனிதர்களும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி விட்டு வடபழனி மயானம் விட்டுக் கண்ணீருடன் வெளியேறினர்.