மீண்டும் இயக்குநராகும், ‘தினந்தோறும்’ நாகராஜ்

மீண்டும் இயக்குநராகும், ‘தினந்தோறும்’ நாகராஜ்

‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பது எத்தனை சத்தியமான வார்த்தை என்பதற்கு இயக்குநர் ‘தினந்தோறும்’ நாகராஜின் வாழ்க்கையே உதாரணம். 1998ஆம் ஆண்டு இவர் இயக்கிய படம் ‘தினந்தோறும்.’ முரளி – சுவலட்சுமி நடித்த இந்தப் படம் வெளிவந்தபோது பத்திரிகை உலகமே கொண்டாடித் தீர்த்தது. இந்தப் படம் வெளிவந்த ஒரு வாரத்துக்குள் அன்றைய முன்னணி தயாரிப்பாளர்கள், கதாநாயகர்கள் யாவரும் நாகராஜுடன் இணைந்துப் பணியாற்ற தூதனுப்பினர்.

இந்தப் படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய, ‘வானம் நீதானா அந்த நிலவும் நீதானா’ என்ற பாடல் பெரிய ஹிட்டானது. தெலுங்கில், ’மனசிச்சி சூடு’ என்ற பெயரில் அந்தப் படம் ரீமேக்கானது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நாகராஜின் பெயருடன் படத்தின் பெயரும் ஒட்டிக்கொண்டு, ‘தினந்தோறும்’ நாகராஜ் என்று ஆனார். கால வெள்ளத்தில் நாகராஜ் வாழ்க்கை திசை மாற, தொடர்ந்து அவரால் திரைப்படங்களை இயக்க முடியாமல் போனது.

அதன் பிறகு கெளதம்மேனன் இயக்கிய, ‘மின்னலே, காக்க… காக்க…’ படங்களுக்கு வசனம் எழுதிய இவரது இயக்கத்தில் 2013ம் ஆண்டு, ‘மத்தாப்பு’ என்ற படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமா பட விவாதங்கள் பலவற்றில் பங்கேற்ற நாகராஜ், ‘நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்பது போல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு திரைப்படத்தை இயக்குகிறார்.

‘Q சினிமாஸ்’ என்ற புதிய பட நிறுவனம் சார்பில் சசிகுமார்.R இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிக்க உள்ளார். பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இசையமைப்பாளர் C.சத்யாவின் இசையில், காடன், இடி முழக்கம் போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அசோக்குமார் ஒளிப்பதிவை கவனிக்கிறார். மாஸ்டர் சாண்டி நடனம் அமைக்க, தினேஷ் சுப்பராயனின் சண்டைக் காட்சிகளில் இப்படம் வெளிவரவிருக்கிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com