நெகிழ்ந்துபோன தங்கர் பச்சான்!

நெகிழ்ந்துபோன தங்கர் பச்சான்!

டிகரும் இயக்குநருமான தங்கர் பச்சான் அடுத்து உருவாக்கிக் கொண்டிருக்கும் திரைப்படம், ‘கருமேகங்கள் கலைகின்றன.’ இந்தத் திரைப்படம் குறித்து பேசிய தங்கர் பச்சான், தாம் இருபது வருடங்களுக்கு முன்பு இயக்கிய, ‘சொல்ல மறந்த கதை’ திரைப்படம் குறித்து மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

“‘சொல்ல மறந்த கதை’ திரைப்படம் வெளியாகி இருபது ஆண்டுகள் ஆகின்றன. 2002ஆம் ஆண்டு தீபாவளி அன்று இந்தப் படம் வெளியானபோது கண்ணீர் கசிந்த கண்களோடு மக்கள் திரையரங்கில் இருந்து வெளியேறினர். அது, தங்கள் வீட்டு கதையாகவும், பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு கதையாகவும், நண்பர்களின் கதையாகவும், உறவினர்களின் கதையாகவும் இருந்ததுதான் அப்படத்தின் தனிச்சிறப்பு. சிறந்த இயக்குநராக அறியப்பட்ட சேரன், இந்த படத்தில் நல்ல நடிகராக அறிமுகமானார். அன்று ஒவ்வொரு குடும்பமும் கொண்டாடித் தீர்த்த ‘சொல்ல மறந்த கதை’யை இப்பொழுதும் இன்றைய தலைமுறையினரும் கொண்டாடி மகிழ்கின்றனர்!

இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு படைப்பாளனாக அப்படத்தைப் பார்த்த நான், மீண்டும் இன்று ஒரு சராசரி பார்வையாளனாகக் கண்டேன். காட்சிக்குக் காட்சி எத்தனை விதமான உணர்வுகள், உணர்ச்சிகள், பாத்திரப்படைப்புகள், உரையாடல்கள் என கண்களைத் திரையில் இருந்து விலகிக் கொள்ளாதபடி என்னைக் கட்டுண்டு வைத்துவிட்டது! இருபது ஆண்டுகள் உருண்டோடிய பின்னும் இப்பொழுதும் என்னால் ‘சிவதாணு- பார்வதி-சொக்கலிங்கம்’வாழ்க்கையிலிருந்து வெளியேற முடியவில்லை!

நமது மண் சார்ந்த மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட, பண்பாடு மற்றும் உறவு நிலைகளை உள்ளடக்கிய திரைப்படமாக இருந்ததால்தான் அது மக்களின் மனதில் ஆழமாக குடி கொண்டு விட்டது என்பதை உணர்ந்தேன். இவ்வாறான அசல் தமிழ்த் திரைப்படங்களைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொண்டேன்! எனது அடுத்தத் திரைப்படமான, 'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படத்தின் மூலமாக உங்கள் அனைவரின் நம்பிக்கையையும் தக்கவைத்துக்கொள்ள முயல்கின்றேன்!” என்று உணர்ச்சி பொங்கக் கூறிப்பிட்டார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com