பேசப்படுவாரா ‘குருமூர்த்தி’

பேசப்படுவாரா ‘குருமூர்த்தி’

‘ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ்’ சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம். ‘குருமூர்த்தி.’ ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களைக் கதைக்களமாகக் கொண்டு தயாராகியுள்ள இந்தத் திரைப்படத்தில் நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகர் ராம்கி முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஒளிப்பதிவாளரான கே.பி.தனசேகரன் முதல் முறையாக இயக்கியுள்ளார். சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற, ‘புஷ்பா’ படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். படத்தொகுப்பை எஸ்.என்.பாசில் கவனித்துள்ளார்

விரைவில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் நட்டி, ராம்கி, பூனம் பஜ்வா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு, விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், ஸ்ரீராம் கார்த்திக், பிரஜின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராம்கி, “ஒரே நாளில் நடக்கும் கதை இது என்றாலும், அடுத்து என்ன நடக்கும், பணம் கிடைத்தால் மனிதன் எப்படி மாறுகிறான் என்பதை வைத்து விறுவிறுப்பாக இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் தனசேகரன்” என்றார்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் நட்டி பேசுகையில், “ஒரே நாளில் நடக்கும் கதை தானே… சிட்டிக்குள்ளேயே இந்தப் படத்தை முடித்துவிடலாம் என்று நினைக்காமல், கதையின் தேவைக்கு ஏற்ப ஊட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறைய செலவு செய்து இந்தப் படத்தைப் படமாக்க தயாரிப்பாளர் முன்வந்ததில் சினிமாவை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பது தெரிகிறது. படப்பிடிப்பில் யானைகள் எப்போது வருமோ என்கிற ஒரு சூழலில்தான் திகிலுடன் நடித்தோம். இந்த படத்தின் கதையை இயக்குநர் தனசேகரன் என்னிடம் கூறியபோது, ‘ஒரே நாளில் இவ்வளவு விஷயங்களா? உங்களால் இதை எல்லாவற்றையும் காட்டிவிட முடியுமா?’ என்று கேட்டேன். சொன்னபடியே அழகாக அத்தனையும் படத்திற்குள் கொண்டு வந்துள்ளார்” என்றார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com