பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணம் செட்டாகாது!
நடிகர் அசோக்செல்வன் பரபரப்பு

பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணம் செட்டாகாது! நடிகர் அசோக்செல்வன் பரபரப்பு

மிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் அசோக்செல்வன். ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து, வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் நடித்து வருகிறார். இதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் உருவாக்கியுள்ளார். ஓ மை கடவுளே, மன்மத லீலை என வெற்றிப்படங்களை தொடர்ந்து, அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தனது வெற்றிக்கு பக்கபலமாக இருந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பில் அவர் பேசும்போது…

“நான் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் திரைத்துறைக்கு வந்தவன். நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். சினிமாவுக்கு வரும் எல்லோருமே கஷ்டப்பட்டுதான் வருகிறார்கள். ஆனால், எனக்கு நீங்கள் தந்த ஆதரவும் அன்பும் மிகப்பெரியது. உங்களது விமர்சனங்களும் கருத்துக்களும்தான் நடிப்புத் துறையில் என்னை செதுக்கியது. என்னுடைய குரு நீங்கள்தான். உங்கள் கருத்துக்களின்படிதான் என் ஒவ்வொரு படத்தையும் தீர்மானிக்கிறேன். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்படியான படங்களைச் செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம்.

ஒவ்வொரு படமும் மாறுபட்ட களங்களில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நித்தம் ஒரு வானம் படமே மூன்று பாத்திரங்கள் என்று நினைத்துதான் செய்தேன். இப்போது அதற்கு வரும் பாராட்டுக்கள் மனதுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தந்துள்ளது. அடுத்தடுத்து மாறுபட்ட கதைக்களங்களில் நிறைய படங்களைச் செய்யவுள்ளேன். கிராமத்துக் கதையில் நடிக்க வேண்டுமென எனக்கும் ஆசை இருக்கிறது. இப்போது ஒரு படத்தில் அதுபற்றிப் பேசி வருகிறோம். விரைவில் கிராமத்துக் கதையில் என்னை பார்க்கலாம். நான் அடுத்ததாக சரத்குமார் சாருடன் இணைந்து ஒரு திரில்லர் படத்தில் நடித்துள்ளேன். மேலும், சில படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறேன். அதுபற்றிய தகவல்கள் தயாரிப்பு நிறுவனத் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

நிறைய பேர் எனது திருமணம் குறித்துக் கேட்கிறார்கள். எனக்கு இப்போதைக்கு கல்யாண பேச்சு இல்லை. அதேசமயம், வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் எனது குணத்துக்கு செட் ஆகாது” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com