ஆண் தேவதைகளை அழகாக காட்டிய நா.முத்துக்குமாருக்கு இன்று பிறந்தநாள்!

ஆண் தேவதைகளை அழகாக காட்டிய நா.முத்துக்குமாருக்கு இன்று பிறந்தநாள்!

ப்பாக்களுக்கு மட்டும் தான் முத்தம் காமத்தை சேர்ந்தது இல்லை என தந்தைகளை தேவதையாக காண்பித்த நா.முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று.

காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரம் கிராமத்தில் பிறந்த நா.முத்துக்குமார், நான்கு வயதிலே தனது தாயின் அன்பை இழந்தவர்.  தமிழாசிரியரான அவரது தந்தை, தனது ஊதியத்தின் 20 சதவீதத்தில் புத்தகங்கள் வாங்கிச் சேர்த்து, வீட்டிலேயே நூலகம் கட்டி தன் மகனுக்கு தமிழின் முகத்தைக் காட்டி வளர்த்தார். இயர்பியல் மாணவரான முத்துக்குமார் தமிழின் ஈர்ப்பினால் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றார். யாப்பிலக்கணத்தை முதுகலையில் முறையாகப் பயின்று சங்க இலக்கியங்களை ஆர்வத்துடன் வாசித்து முடித்திருந்தாலும் அந்தப் புலமையை தன் வரிகளில் திணிக்காமல் எல்லோராலும் ரசிக்கக்கூடிய எளிமையான வரிகளை மட்டுமே மெட்டுக்குள் சேர்த்தார் முத்துக்குமார்.

குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ள நா.முத்துக்குமார், ஆரம்பத்தில் திரைப்பட இயக்குனராக விரும்பியே பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். நான்கு வருடம் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர், அங்கு கிடைத்த சீமானின் நட்பு மூலம் அவர் இயக்கிய வீரநடை படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பை பெற்றார்.

ஒரு பாடலாசிரியர் தன் திறமையை நிரூபிக்க வேண்டுமென்றால் அவருடைய அலைவரிசைக்கு ஏற்ப ஒரு இசையமைப்பாளர் அவருக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். அப்படி நா.முத்துக்குமாருக்கு கிடைத்த ஒரு இசையமைப்பாளர்தான் யுவன் ஷங்கர் ராஜா. ஆரம்ப காலத்தில் யுவனின் கூட்டணியில் நா.முத்துக்குமார் எழுதிய பாடல்களே அவரை கவனிக்கப்பட வேண்டிய பாடலாசிரியராக மாற்றியது.

நவீன கால தமிழ் சினிமாவில் காதல் பிரிவையும் காதல் தோல்வியையும் நா.முத்துக்குமார் அளவு வரிகளில் கொண்டு வந்த பாடலாசிரியர் நிச்சயம் இருக்க முடியாது. முத்துக்குமார் எழுதிய அமரத்துவம் வாய்ந்த பல பாடல்களில் அவரது காதல் தோல்வி பாடல்களே முதன்மையானது.

ஒரு போக்கில் போய்கொண்டிருந்த நேரத்தில் ஆண்களை தேவதைகளாக காண்பித்தவர் இவர் தான். இவரது வரிகள் அனைத்தும் நெஞ்சில் அம்பை போன்று பாய்ந்து மாரை துளைக்கும் என்றே சொல்லலாம். ஆனந்த யாழை, தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் என தந்தைகளின் வலியையும், தந்தைகளை தேவதைகளாகவும் காட்டியவர். 

தொடர்ந்து பல வருடங்களாக, வருடத்தில் அதிக பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் என்ற பெருமையை தன்னோடு வைத்துக் கொண்ட நா.முத்துக்குமார், தூசிகள், நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன், பால காண்டம் போன்ற பல கவிதை தொகுப்புகளையும் சில்க் சிட்டி எனும் நாவலையும் எழுதியுள்ளார். இதுபோக அஜித் நடித்த கிரீடம் படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.

92-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1500-க்கும் மேற்பட்ட பாடல்கள் இதில் 2 தேசிய விருது ஒரு மாநில விருது போன்றவை இவருடைய திரை பயணத்தை அலங்கரித்தாலும் தன்னுடைய 48-வது பிறந்தநாளில் நம்முடன் இல்லை என்பதை ஏற்க மறுக்கிறது மனம். இவர் மறைந்தாலும் பாடல் வரிகளால் நம்முடன் என்றுமே உடன் வாழ்ந்து தான் வருகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com