ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய அமிதாப் பச்சன் & அனுஷ்கா ஷர்மா மீது காவல் துறை நடவடிக்கை!
மும்பை வாகன நெரிசலைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டியது இல்லை. அதில் தினம் தினம் சிக்கிச் சின்னா பின்னமாகும் மக்களில் செலிபிரிட்டிகள், பொதுமக்கள், அரசியல் செல்வாக்குப் பெற்றவர்கள், அடித்தட்டு மக்கள் என்ற வேறுபாடுகளெல்லாம் இல்லை. எல்லோருமே ஒரு கட்டத்தில் அதை எதிர்கொண்டு கடக்க வேண்டியதாகி விடுகிறது.
அப்படி சமீபத்தில் மும்பை வாகன நெரிசலில் சிக்கியதோடு சர்ச்சையிலும் சிக்கிக் கொண்டார்கள் இரண்டு செலிபிரிட்டிகள். அவர்கள் பாலிவுட் பிக் பி அமிதாப் பச்சன் & அனுஷ்கா ஷர்மா.
திங்களன்று அமிதாப் பச்சன் உரிய நேரத்தில் தனது படப்பிடிப்புத் தளத்தை அடைவதற்காக பைக் சவாரியைத் தேர்வு செய்தார். அதே வழியைப் பின்பற்றி நடிகையும், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா ஜூஹூ கடற்கரைச் சாலையில் மரம் விழுந்து சாலைப்போக்குவரத்து தடைபட்டதால் நடுவழியில் தனது காரை நிறுத்தி விட்டு சாலைத் தடையைத் தவிர்க்க பைக் சவாரியைத் தேர்ந்தெடுத்தார்.
அவர்கள் பைக் சவாரியைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் உரிய நேரத்தில் தங்களது வேலைத் தளத்தைச் சென்றடைவதற்காகத்தான். ஆனால், அவர்கள் இவ்வாறு பைக் சாவரியைப் பொதுவெளியில் மேற்கொள்ளும் போது ஒரு முக்கியமான விஷயத்தைச் செய்ய மறந்து விட்டார்கள். அதனால் தான் இப்போது சர்ச்சையிலும் சிக்கிக் கொண்டார்கள்.
சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் எவ்வளவோ பேர் பயணிக்கிறார்கள். அதில் சிலர் போக்குவரத்து காவல்துறையிடம் சிக்காமல் தப்பி விடுகிறார்கள். சிலரோ சிக்கிக் கொண்டு அபராதம் கட்டுகிறார்கள். சாமானியர்களுக்கு அப்படி நேரும் போது அது பெரிதாக செய்தியாவதில்லை. பத்தோடு பதினொன்றாக நாம் அதைக் கடத்து விடுகிறோம். ஆனால், அமிதாப் பச்சன், அனுஷ்கா ஷர்மா போன்ற நாடறிந்த நடிகர், நடிகைகள் அப்படியான பிழைகளில் ஈடுபட்டால் இணையத்தின் கைங்கரியத்தால் அது உலகம் முழுக்க வைரலாகி விடுகிறது. ஆர்வம் கொண்ட வெகுஜன மக்களால் அப்படியான சமயங்களில் எடுக்கப்படும் அவர்களது புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகும் போது பல நேரங்களில் சர்ச்சையாகவும் மாறி விடுகிறது.
மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளிலும், பரவிய வீடியோக்களில் நடிகர்களோ அல்லது ஓட்டுநர்களோ ஹெல்மெட் அணியவில்லை என்பதைக் கவனித்த நெட்டிசன்கள் அதுகுறித்து மும்பை காவல்துறையின் சமூக ஊடக இணைய தளத்தில் பகிர்ந்தனர். அதன் பின்விளைவாக தற்போது இரண்டு நட்சத்திரங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நட்சத்திரங்கள் மீது நடவடிக்கை எடுக்க மும்பை காவல்துறையை அணுகிய ட்விட்டர் பயனர்களுக்கு மும்பை காவல்துறை பதில் அளிக்கும் விதமாக; உண்மையில் அவர்கள் நடவடிக்கைகளை நாங்களும் கவனித்துள்ளோம் என்று ட்வீட் செய்ததுடன், “நாங்கள் இதை போக்குவரத்துக் கிளையுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம்.” என்று தெரிவித்திருக்கிறது.
திங்கட்கிழமை காலை அமிதாப் பச்சன் தனது சமூக ஊடக தளங்களில் தனது பைக்கில் லிஃப்ட் கொடுத்த ரசிகருக்கு நன்றி தெரிவித்திருந்தார் , மேலும் பச்சன், அவர் பைக்கில் பில்லியன் சவாரி செய்யும் படத்தைப் பகிர்ந்துகொண்டு, “சவாரி செய்ததற்கு நன்றி நண்பரே.. உங்களுக்குத் தெரியாது.. ஆனால் நீங்கள் என்னைக் கட்டாயப்படுத்தி வேலை செய்யும் இடத்திற்கு சரியான நேரத்துக்கு அழைத்துச் சென்றீர்கள். தீர்க்க முடியாத போக்குவரத்து நெரிசல்கள் ... தொப்பி, ஷார்ட்ஸ் மற்றும் மஞ்சள் நிற டி-சர்ட் உரிமையாளருக்கு நன்றி."
- என்று தமது நன்றியையும், அனுபவத்தையும் பகிர்ந்திருந்தார்..
அதேபோல அனுஷ்கா ஷர்மா ஒரு பைக் சவாரியைத் தேர்வுசெய்த வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலானது, அதை பலர் தங்கள் இன்ஸ்டாகிராம் தளங்களில் பகிர்ந்து கொண்டனர். அந்த வீடியோவில், ஜூஹுவில் மரம் விழுந்ததால் அனுஷ்கா தனது ஊழியர் ஒருவரின் ஸ்கூட்டர் ஒன்றில் ஏறிச் செல்வதைக் காண முடிந்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் தனது காரில் அமர்ந்து கொண்டு பைக் ரைடர்களை ஹெல்மெட் அணிவதை உறுதி செய்யச் சொல்லும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார் என்பது இந்தச் சமயத்தில் குறிப்பிடத் தக்கது.
மும்பையில் பைக் ஓட்டுபவர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். கடந்த ஆண்டு, ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மும்பை போக்குவரத்து போலீசார் தெரிவித்திருந்தனர். நகரில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் பலர் ஹெல்மெட் அணியாமல் இருப்பதை அவதானித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் பிரிவுகள் 129 (பாதுகாப்பு தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்குகிறது) மற்றும் 194 டி (பிரிவு 129 ஐ மீறியதற்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் நபர்களுக்குப் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்க வேண்டும். எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.