'பொன்னியின் செல்வன் 2' படத்திற்கு வந்த சோதனை!
கடந்தாண்டு செப்டெம்பர் 30ம் தேதி உலகெங்கும் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கிட்டத்தட்ட 500 கோடி வசூலித்து சாதனை படைத்த நிலையில், 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்தை தெலுங்கு வினியோகஸ்தர்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
'பொன்னியின் செல்வன்' என்ற மாபெரும் நாவலை படமாக்க கோலிவுட்டில் பல ஜாம்பவான்கள் முயற்சி செய்த நிலையில், யாராலும் அதை செய்துகாட்ட முடியவில்லை. அப்படிப்பட்ட பிரம்மாணட நாவலை இயக்குநர் மணிரத்னம், லைகா நிறுவனத்துடன் கைகோர்த்து முயன்று, அதில் வெற்றியும் கண்டார்.
அதன்படி கடந்தாண்டு வெளியான அத்திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதோடு, 500 கோடி வசூலித்து சாதனையும் படைத்தது.
அந்த வெற்றிக்களிப்போடு, 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் வேலைகளும் ஜரூராக நடைபெற்று வரும் நிலையில், அவ்வப்போது அப்படத்தின் அப்டேட்களும் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில், நேற்று, இப்படத்தின் முதல் பாடலான 'அக நக' என்ற பாடலும் ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்நிலையில், 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் பிசினஸ் குறித்த அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதன்படி, ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளில், 'பொன்னியின் செல்வன் 2' படத்தை வெளியிட தெலுங்கு வினியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகளவில் ரூ.500 கோடி வசூலை அள்ளிக் குவித்தாலும், இந்தி மற்றும் தெலுங்கில் போதுமான வரவேற்பு இல்லையாம்.
சமீபத்தில் தெலுங்கு வெர்ஷன் பொன்னியின் செல்வனை டிவியில் ஒளிபரப்பியபோதும் எதிர்பார்த்த டிஆர்பி ரேட்டிங் கிடைக்கவில்லையாம். அதனால், 'பொன்னியின் செல்வன்' படத்தை, தெலுங்கு வினியோகஸ்தர்கள் வாங்குவதற்கு பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இது 'பொன்னியின் செல்வன் 2' படக்குழுவினருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.