
ஜாக் டேனியல் திரைப்படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டு 20 லட்சம் ரூபாயை வாங்கிய யோகி பாபு படத்தில் நடிக்காமலும் பணத்தை திருப்பி தராமலலும் மோசடி செய்து வருவதாக தயாரிப்பாளர் ஆசீர் காவல் நிலையத்தில் புகார்.
தமிழ் திரை உலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. மேலும் யோகி பாபு கதாநாயகனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார். இவ்வாறு வருடத்திற்கு 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படி தொடர்ந்து பிசியாக இயங்கி வரும் நடிகர் யோகி பாபுவின் கால்ஷீடைப் பெற முன்னணி இயக்குனர்களும் தயாரிப்பாளர்களுமே காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் 20 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு படத்தில் நடிப்பதாக கூறி ஏமாற்றி வருவதாக நடிகர் யோகி பாபு மீது தயாரிப்பாளர் ஆசீர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரியில் தெரிவிக்கப்பட்டிருப்பது, நான் சென்னை வளசரவாக்கம் அடுத்துள்ள பழனியப்பா நகரில் வசித்து வருகிறேன். நான் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறேன். எனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக ஜாக் டேனியல் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பதாக ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் அடிப்படையில் அவருக்கு 65 லட்சம் ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டது. அதன் முதல் தொகையாக 20 லட்சம் ரூபாய் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பணத்தைப் பெற்றுக் கொண்ட யோகி பாபு சூட்டிங்கிற்கு வராமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறார். இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கும் பொழுது வேறொரு படப்பிடிப்பில் இருப்பதாக கூறி ஜாக் டேனியல் திரைப்படத்தில் நடிக்க தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இதை அடுத்து அவரிடம் பணத்தைத் திரும்பி கேட்டும் சரியான பதிலை அளிக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறார். இவ்வாறு 20 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளதாக நடிகர் யோகி பாபு மீது தயாரிப்பாளர் ஆசீர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.நடிகர் யோகி பாபு முன்னணி காமெடி நடிகராக உள்ளதால், இவர் மீது அழிக்கப்பட்டுள்ள இந்த புகார் திரை வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.