‘புஷ்பா-2’ திரைப்பட மாஸ் அப்டேட்!
தெலுங்கு மொழியில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவின் பல மாநிலங்களிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தந்த திரைப்படம் புஷ்பா. இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். செம்மரக் கடத்தல் குறித்த கதைக் களத்தை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தை சுகுமார் என்பவர் இயக்கி இருந்தார்.
இந்தத் திரைப்படம் உருவானபோதே இது மாபெரும் வெற்றிப் படமாக அமையும் என்பதை ஊகித்த, படக் குழுவினர் இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது என முடிவு செய்துவிட்டனர். அதன்படி புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது. முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகம் பல மடங்கு பிரம்மாண்டமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் படக் குழுவினர் வேலை செய்து வருகின்றனர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
புஷ்பா படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு தற்போது அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து உள்ளிட்ட சில வெளிநாடுகளிலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது பிறந்த நாளை வரும் ஏப்ரல் 8ம் தேதி கொண்டாட இருக்கிறார். இதையொட்டி, ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிடவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான இந்த சிறப்பு வீடியோ ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.