ரஜினிக்கு பிடித்த இரண்டு கதாநாயகிகள்!
பிஹைண்ட் வுட்ஸ் சமீபத்தில் மீனாவுக்காக மீனா 40 என்றொரு நிகழ்ச்சியை நடத்தியது. அந்த நிகழ்ச்சியில் மீனா குறித்து அவரது சமகால நடிகைகள் முதல் மூத்த தலைமுறை நடிகர் நடிகைகள் வரை பலர் பேசினர். அவர்களது பேச்சு மொத்தமும் ஒரு ஃபேன் மொமெண்ட்டாகவே இருந்தது. மீனாவின் அழகையும், நடிப்பாற்றலையும் ரசிக்காதவர்கள் எவருமில்லை. அந்த நிகழ்ச்சியின் ஹைலைட் “ரஜினி அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க?” என்ற பேபி நைனிகாவின் அழைப்பின் பேரில் மேடை ஏறி மைக் பிடித்து மீனா குறித்து சூப்பர் ஸ்டார் பகிர்ந்து கொண்ட தகவல்களே!
ரஜினி தமது உரையில் பகிர்ந்து கொண்ட செய்திகளில் ஒன்று அவருடன் நடித்த கதாநாயகிகளில் இருவரை அவருக்கு மிகவும் பிடிக்கும். அந்த இருவருடன் நடிக்கும் போது தான் அவர்களுடன் நிறையப் பேசுவது வழக்கம் என்று கூறினார். இதைச் சொல்வதால் இங்கிருக்கும் மற்ற கதாநாயகிகள் யாரும் கோபித்துக் கொள்ளப்போவதில்லை, அவர்களுக்கே அது நன்றாகத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் குறிப்பிட்ட அந்த இரண்டு கதாநாயகிகள் வேறு யாரும் இல்லை. ஒருவர் ஸ்ரீதேவி மற்றொருவர் மீனா. ரஜினி இதைச் சொல்லும் போது மீனாவின் முகத்தில் 1000 வாட்ஸ் பல்ப் போட்ட எஃபெக்ட். அப்படி ஒரு மனங்குளிர்ந்த சிரிப்பை மீனா தவிர வேறு யாராலும் வெளிப்படுத்தி இருக்க முடியாது. ஏன் இவர்கள் இருவரையும் பிடிக்கும் என்பதற்கு சூப்பர் ஸ்டார் அளித்த விளக்கம்.
இருவருமே சைல்ட் ஆர்டிஸ்ட்டாக இருந்து கதாநாயகிகள் ஆனவர்கள். மீனா, என்னுடன் எங்கேயோ கேட்ட குரல் திரைப்படத்தில் மகளாக நடித்திருந்தார். அன்புள்ள ரஜினிகாந்தில் என்னுடைய குட்டி ரசிகையாக நடித்திருந்தார். அவரே மீண்டும் ஒரு காலகட்டத்தில் எனக்கு ஜோடியாக எஜமான் படத்தில் நடிக்க வந்த போது அவரது டிரான்ஸ்ஃபர்மேஷன் கண்டு நான் வியந்து போனேன். அப்படி ஒரு அழகு, அப்படி ஒரு சார்மிங், நடிப்பாற்றல், மீனாவின் நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதே போல ஸ்ரீதேவி , மூன்று முடிச்சு படத்தில் 15 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அந்தப் படத்தில் நான் வில்லன். நாங்கள் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தோம், தயாரிப்பாளர், இயக்குநர் வரும் போது எழுந்து நின்று வணக்கம் சொல்வோம் இல்லையா, நாங்கள் அப்படி வணக்கம் சொல்லும் போது ஸ்ரீதேவியின் அம்மா, பப்பி, டைரக்டருக்கு வணக்கம் சொல்லி என்கிறார், அதற்கு ஸ்ரீதேவி எழுந்து குட்மார்னிங் டீச்சர் என்றார். அப்போதிருந்தே அதைக் குறிப்பிட்டு நான் அவரை அடிக்கடி ரகளை செய்து கொண்டிருப்பேன். அவ்வளவு இன்னொசண்ட் அவர். அவருமே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு என்னுடன் கதாநாயகியாகவும் பல படங்களில் நடித்தார்.
பல நேரங்களில் ரஜினி இப்படி மனம் திறந்து பேசக்கூடியவர் அல்ல! ஆனால், மீனா 40 யில் அவர் பேசியது இவ்விதமாக மனம் நிறைந்த பேச்சாகவே இருந்தது.