சாமானியன் படத்தின் தலைப்பு – நீதிமன்றத்தின் ஆணை!

சாமானியன் படத்தின் தலைப்பு – நீதிமன்றத்தின் ஆணை!

இந்தக் காலத்தில் படம் ஒன்றைத் தயாரித்து வெளியிடுவதே சவால்கள் நிரம்பிய வேலை. இதில் டைட்டிலுக்காகக் கோர்ட், கேஸ் என்று அலைவது கூடுதல் சிரமம்தானே? இருந்தாலும் நீதிமன்றம் வரை சென்று போராடி, ‘சாமான்யன்’ என்ற தமது பட டைட்டிலைத் தக்கவைத்திருக்கிறார் அதன் தயாரிப்பாளர்.

கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ராமராஜன் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். இந்த படத்தை இயக்குநர் R.ராகேஷ் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே தம்பிக் கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய  படங்களை இயக்கியவர்.

கதாநாயகியாக நக்சா சரண் என்பவர் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இளையராஜா, தற்போது 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் ராமராஜனுடன் கைகோர்த்துள்ளார்.

தற்போது சாமானியன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. படத்தை வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிடுவதற்கான வேலைகளில் தயாரிப்பு நிறுவனம் பரபரப்பாக ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில் ‘சாமானியன்’ என்கிற டைட்டில் தங்களுக்குத்தான் சொந்தம் என வேறு ஒரு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன் சாமானியன் படத்தை வெளியிட தடை செய்து நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மனுச்செய்து இருந்தார்கள். இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் எட்செட்ரா என்டர்டைன்மென்ட்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் V மதியழகனுக்குத்தான் இந்த டைட்டில் சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பு குறித்து தயாரிப்பாளர் எட்செட்ரா என்டர்டைன்மெண்ட்ஸ் V மதியழகன் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

“இந்த படத்தை ஆரம்பித்தபோது டைட்டில், டீசர் லான்ச் என பெரிய அளவில்தான் துவங்கினோம். அப்போதெல்லாம் யாரும் இந்தப் படத்தின் டைட்டிலுக்கு சொந்தம் கொண்டாடிக்கொண்டு வரவில்லை. படப்பிடிப்பு துவங்கிப் பத்து நாட்கள் கழிந்த பிறகு நடன இயக்குனர் பாபி இந்த படத்தின் டைட்டில் உரிமை தன்னிடம் இருப்பதாகக் கூறினார்.

இந்தப் படத்தின் டைட்டிலை 2016ல் இருந்து புதுப்பித்து வருவதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. பாபி மாஸ்டரிடம் ஆவணம் எதுவும் இருந்தால் அதை சமர்ப்பிக்கலாம் என்று கூறினோம். இதனால் பாபி மாஸ்டருடன் மனக்கசப்புதான் ஏற்பட்டது. நான் இது குறித்து விளக்கத்தை அளிக்க முன்வந்தாலும் அதை கேட்கின்ற மனநிலையில் அவர் இல்லை. அத்துடன் அந்த பிரச்சினை முடிந்தது.

அதைத் தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்னொரு நபர் தாங்கள் ஏற்கனவே சாமானியன் என்கிற டைட்டிலில் ஒரு படத்தை எடுத்து வருவதாகவும் படத்தை முடித்து அதற்கு சென்சார் சான்றிதழும் வாங்கிவிட்டதாக கூறி எங்கள் படத்திற்கு சாமானியன் படத்தை பயன்படுத்துவதற்கு தடை கேட்டு நீதிமன்றத்தை அணுகினார்.

இதையடுத்து  நாங்கள் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராம நாராயணனிடம் சென்று இந்த படத்தின் டைட்டிலை பதிவு செய்து, தவறாமல் புதுப்பித்தும் வருகிறோம். இந்த வருட ஏப்ரலில் தான் புதுப்பிக்கும் காலக்கெடு முடிகிறது. அதற்குள் நாங்கள் படத்தையே ரிலீஸ் செய்து விடுவோம். மீண்டும் புதுப்பிக்க வேண்டிய தேவைகூட இருக்காது. இந்த நிலையில் இப்படி வழக்கு தொடர்ந்து உள்ளார்களே என கேட்டோம்.

அதற்கு முரளி ராம நாராயணன் அவர்கள், தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) மூலம் இந்த டைட்டிலை பதிவு செய்துள்ளதாக அவர்கள் சொல்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின்போது நிச்சயமாக இந்த டைட்டிலை நீங்கள்தான் முறைப்படி பதிவு செய்து இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் கூறுவோம் என்று உறுதி அளித்தார்.

நாங்களும் எங்களது வழக்கறிஞர் விஜயன் மூலமாக வழக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டபடி படத்தின் வேலைகளை விரைவுபடுத்தி டப்பிங் வரை வந்து விட்டோம். அந்தச் சமயத்தில் மீண்டும் இந்தப் படத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று எதிர்த் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அந்த விஷயத்தை ரொம்ப சீரியஸாக மாற்ற தொடங்கினார்கள்.

இதைத் தொடர்ந்து நாங்கள் இந்த படத்திற்காக விலங்குகள் நல வாரியத்தில் பெற்ற சான்று, டப்பிங் முடிந்ததற்காக பெற்ற சான்று மற்றும் படப்பிடிப்பு முடிந்ததற்கான பல சான்றுகளை ஒன்றிணைத்து இந்த படத்திற்காக நாங்கள் செலவுகளை செய்த செலவுகளையும் பட்டியலிட்டு ஆதாரங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். அவர்கள் தரப்பிலிருந்து இதுபோன்ற ஆவணங்கள் எதையுமே சமர்ப்பிக்காமலேயே டைட்டில் தங்களுக்கே சொந்தம் என்று வாதாடினார்கள்.

மேலும் அவர்கள் சென்சாரில் இருந்து பெறப்பட்ட சான்றிதழ் ஒன்றை சமர்ப்பித்தார்கள். அது அந்த படத்தில் எடுக்கப்பட்ட ஒரு நிமிட காட்சி ஒன்றுக்காக டீசர் அல்லது ட்ரைலர் என்கிற பெயரில் சென்சாரில் இருந்து வழங்கப்பட்ட சான்றிதழ். அந்த சான்றிதழில் சாமானியன் என டைட்டில் குறிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுவே ஒரு மொத்த படத்திற்கான சென்சார் சான்றிதழ் அல்ல.

இரு தரப்பு விளக்கத்தையும் கேட்ட நீதிபதியிடம், எங்களது தரப்பு வழக்கறிஞர் விஜயன், நாங்கள் முழுப் படத்தையும் முடித்து விட்டோம். தங்கள் முன் திரையிட்டுக் காட்டத் தயாராக இருக்கிறோம். அவர்களது படத்தையும் அவர்கள் திரையிட்டு காட்டட்டும். எந்தப் படம் முழுதாக முடிவடைந்துள்ளதோ, அதன் பிறகு நீங்களே தீர்ப்பு கூறுங்கள் என்று எங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தோம்.

அதைக் கேட்ட நீதிபதி அவர்களிடம் இதற்கு சம்மதமா என்று கேட்க அவர்களால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.. இதை தொடர்ந்து, அவர்களிடம் நீங்கள் பொய்சொல்லி இருக்கிறீர்கள். இந்த படத்தின் டைட்டில் எக்ஸட்ரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்திற்குத்தான் சொந்தம் என தீர்ப்பளித்துள்ளனர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com