தமிழ் சினிமாவில் சரத்குமார் சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்ய போகிறார். சரத் நடித்து 150 வது படம் விரைவில் வெளிவரப் போகிறது.1987 ல் கண் சிமிட்டும் நேரம் படத்தில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கி, இப்போது வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் வரை பல்வேறு கதா பாத்திரங்களில் நடித்து விட்டார். வில்லனாக தொடங்கி, ஹீரோவாக பல படங்கள் நடித்து இப்போது பல்வேறு வித்தியாசமான கதா பாத்திரங்களில் நடித்து வருகிறார் சரத் குமார். சில படங்களை தயாரித்தார். அரசியலுக்கும் சென்றார்.
சமீபத்தில் தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொள்ள பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார் சரத். "என் வாழ்க்கையை பத்திரிகையாளராக தொடங்கினேன். இந்த நாற்பது ஆண்டு கால சினிமா பயணத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதுதான் சரியாக இருக்கும். நான் எப்போதும் ஜாலியாக பேசுவதாக நினைக்கிறார்கள். எனக்குள் மனதில் ஒரு ஓரத்தில் சொல்ல முடியாத வலி இருக்கிறது. தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து கொண்டிருக்கிறேன். இப்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க போகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அம்மாவை ஏர்போர்ட் வாசலில் தவிக்க விட்டு அமெரிக்கா பறந்து சென்ற மகனை பற்றி படித்தேன். இதை போன்று ஒரு கதையாக ருத்ரன் கதை இருந்ததால் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பு கொண்டேன். வரலக்ஷ்மி என்னைவிட மிக நன்றாக நடிப்பதாக சொல்கிறார்கள். இது எனக்கு பெருமையான விஷயம் தான்.
என்னிடம் இருந்த சுமார் 3000 புத்தகங்களை இலவசமாக பலருக்கு தந்து விட்டேன். நான் கிரிமினாலஜி படிப்பு சேர்ந்துள்ளேன். ஆனால் படிக்கவும், தேர்வு எழுதவும் நேரம் இல்லை. கிரிமினாலஜி படிக்கும் பெண்ணிற்கு என் புத்தகங்கள் அனைத்தும் இலவசமாக தந்துவிட்டேன்" என்று சொல்லும் சரத்குமார் தன் வெற்றிக்கு காரணம் தன்னம்பிக்கை என்கிறார். சரத் குமார் தற்சமயம் முப்பது படங்களில் நடித்து வருகிறார். அடுத்த வருடம் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டை இன்னும் ஓரிரு மாதங்களில் சொல்ல போவதாக சஸ்பென்ஸ் வைத்துளார் சரத்.