அரசியலில் நுழையும் சத்யராஜ் மகள்!

அரசியலில் நுழையும் சத்யராஜ் மகள்!

பாகுபலி புகழ் கட்டப்பாவான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் விரைவில் அரசியலில் நுழைய இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அன்னையர் தினத்தையொட்டி தந்தை சத்யராஜின் தோளில் சாய்ந்தப்படியான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார் திவ்யா சத்யராஜ். அப்பாவுக்கு அன்னையர் தின வாழ்த்து என தொடங்கும் அவரின் பதிவில், எல்.கே.ஜி படிக்கும் போதிலிருந்தே சத்யா (சத்யராஜ்) எனக்குச் சிறந்த தோழி. என்னுடைய முதல் Crush, முகப்பருக்கள் மற்றும் மாதவிடாய் தொடர்பான PMS பிரச்சனைகள் பற்றி அவருக்குத் தெரியும். சத்யா என்னைவிட வயதிலும் உயரத்திலும் மூத்தவர் என்றாலும் நான் என் ஏழு வயதிலிருந்தே அவரை ஒரு குழந்தை போலவே நடத்தினேன். இந்த குழந்தைதான் உலகின் தலைசிறந்த மனிதன். எனது வாழ்க்கையில் கடந்த 3 வருடங்கள் மிகவும் பயமாகவும் சவாலாகவும் இருந்தன. நான் கடுமையான ஃபோபியா மற்றும் தூக்கமில்லாத இரவுகளைக் கடக்க வேண்டியிருந்தது. ஆனால், நான் அப்பாவின் முன் அழுததில்லை. ஏனென்றால் என் அழுகை அவரை உடைத்துவிடும். என்னுடைய கடினமான நாட்களின் போது உடனிருந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. ஊட்டச்சத்து நிபுணராக எனது பணிக்காக நான் பெற்ற அனைத்து விருதுகள் மற்றும் அங்கீகாரங்களுக்காக நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது நோயாளிகளின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த நான் தொடர்ந்து பணியாற்றுவேன். நான் விரைவில் அரசியலில் எனது பயணத்தை தொடங்குவேன், என் கனவை நோக்கி நான் கவனம் செலுத்துவேன், ஆனால், எனது குடும்பம் எப்போதும் எனது முன்னுரிமையாக இருக்கும். எனது குடும்பத்தைப் பாதுகாக்க இந்த முழு சூரியக் குடும்பத்தையும் மறுசீரமைக்க வேண்டுமானாலும் அதனையும் செய்வேன். வாழ்க்கை கடினமாக இருக்கலாம் ஆனால் கட்டப்பாவுடன் ஒரு காபி எப்போதும் என்னை உயர்த்துகிறது!

அம்மா எங்கள் வீட்டின் ராணி மற்றும் உலகின் சிறந்த தாய், அம்மாவிற்கும் அப்பாவிற்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் தலைசிறந்த ஊட்டச்சத்து நிபுணர் எனப் பெயர் எடுத்துள்ள திவ்யா சத்யராஜ், தன்னுடைய ஊட்டச்சத்து விழிப்புணர்வு செயல்பாடுகளாலும், அரசியல் கருத்துகளாலும் சமூகத்தில் தந்தை சத்யராஜ் போல் தனக்கென தனி இடம் பிடித்தவர். அதேபோல், அக்ஷய பத்ரா அமைப்பின் விளம்பர தூதராகவும் திவ்யா சத்யராஜ் உள்ளார். மேலும், கம்யூனிசம் சித்தாந்தத்தின் மீது ஆர்வம் உள்ளதாகப் பல பேட்டிகளில் கூறியுள்ள திவ்யா சத்யராஜ், நிச்சயம் ஒருநாள் அரசியலுக்கு வருவேன் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், விரைவில் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாகத் தெரிவித்திருப்பது சினிமா வட்டாரத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக 2024ம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், திவ்யா சத்யராஜ், தந்தையைப் போல் திராவிட கருத்தைப் பின்பற்றி திராவிட கருத்தியலைக் கொண்ட அரசியல் கட்சியில் இணைவாரா அல்லது கம்யூனிச கொள்கையைப் பின்பற்றி இடதுசாரி கட்சியில் இணைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்…

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com