
முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் ஷாருக்கான், மும்பை ஏர்போர்ட்டிற்கு வந்தபோது, செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்ஃபோனை தட்டிவிட்ட சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான். இவரது படங்கள் என்றாலே அன்று முதல் இன்று வரை ரசிகர்களிடையே தனி வரவேற்பை பெற்று வருகிறது.
அந்தவகையில், பாலிவுட்டில் சமீபத்தில் வெளியான படங்களில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம் 'பதான்'. ஷாருக்கான் கதாநாயகனாகவும், தீபிகா படுகோனே கதாநாயகியாகவும், மற்றும் சல்மான்கான், ஜான் ஆப்ரகாம் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் உலகளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, 1000 கோடி வசூலைத் தாண்டி பாலிவுட் திரையுலகையே நிமிர்ந்து பார்க்கும்படி செய்தது.
அதையடுத்து, தற்போது அட்லீ இயக்கத்தில் 'ஜவான்' திரைப்படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா, வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூன் மாதம் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது.
ஷாருக்கான் படமென்றால் அது பாலிவுட்டையும் தாண்டி, தென்னிந்தியாவிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்தளவுக்கு அவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் அவரும் தனது ரசிகர்களுக்கு மதிப்பளிக்கக்கூடியவர். அவரது வீட்டு வாசலில் ரசிகர்கள் கூடினாலும் உடனே அவர்களை பார்க்கக்கூடிய குணமுள்ளவர்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் மும்பை விமான நிலையத்திற்கு வந்திருந்தபோது, ரசிகர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க முற்பட்டுள்ளார்.
அப்போது ஷாருக்கான் என்ன மனநிலையில் இருந்தாரோ, செல்ஃபி எடுக்க முயன்ற அந்த நபரின் செல்ஃபோனை தட்டிவிட்டார். அதோடு அவரைப் பார்த்து முறைத்தபடி அங்கிருந்து சென்றுள்ளார்.
இதுசம்பந்தமான வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.