இரட்டை விருந்து தரப்போகும் ஸ்ருதிஹாசன்!

இரட்டை விருந்து தரப்போகும் ஸ்ருதிஹாசன்!

'உலகநாயகன்' கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான நடிப்புத் திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் தயாராகி அடுத்து வெளிவர இருக்கும் இரண்டு திரைப்படங்கள், ஒரே நாளில் வெளியாகவிருப்பது ஸ்ருதிஹாசன் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இளைஞர்கள் பலரின் கையடக்க கணினி முதல், அவர்கள் பணியாற்றும் மடிக்கணினி வரை டிஜிட்டல் திரை நாயகியாக காட்சியளிப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன். சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் முன்னணி நட்சத்திர நடிகையும் இவரே ஆவார். அதோடு, மில்லியன் கணக்கிலான ரசிகர்களை தனது சமூக வலைதள பக்கங்களின் பின் தொடர்பாளர்களாக கொண்டிருக்கும் இவர், தன்னைப் பற்றிய செய்திகளையும், தான் உணர்ந்த உணர்வுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நேர்மையானவர். இதற்கு சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட காணொளிகளும், செய்திகளுமே சாட்சி.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்திருக்கும் 'வால்டேர் வீரய்யா' மற்றும் மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி இருக்கும் 'வீரசிம்ஹா ரெட்டி' ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களுமே அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சங்கராந்தி திருவிழாவின்போது வெளியாக இருக்கிறது. ஒரே நாளில் இந்த இரண்டு திரைப்படங்களும் வெளியாகவிருப்பதால் ஸ்ருதிஹாசனின் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்திருக்கிறார்கள். அத்துடன் இதனை இணையத்திலும் வைரலாக்கி வருகிறார்கள்.

இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது 'கே. ஜி. எஃப்' புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிக்கும் 'சலார்' எனும் திரைப்படத்திலும், 'தி ஐ' எனும் ஹாலிவுட் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com