'SK 21' : கமலுடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்!
பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'அயலான்' படத்தில் நடித்துவரும் நிலையில், அவரது அடுத்த படமான 'SK 21' படத்தை, கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், 'SK 21' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.
சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி பார்ப்பார்கள். அந்தளவுக்கு அவரது நடிப்பு நகைச்சுவை உணர்வோடு இருக்கும். அந்தவகையில் தற்போது அவர் நடித்து வரும் 'அயலான்' திரைப்படம் வேற்றுகிரக ஏலியனுக்கும், மனிதனுக்கும் இருக்கின்ற தொடர்பை மையப்படுத்தி கதை அமையவிருப்பதால் இப்படமும் அனைத்து தரப்பு ரசிகர்களையும், குழந்தைகளையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை யார் இயக்குவார், எந்த தயாரிப்பின் கீழ் உருவாகும் என எதிர்பார்ப்புகள் கிளம்பிவந்தநிலையில், கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலில்ம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் 'SK 21' படத்தை தயாரிக்கிறது. கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'ரங்கூன்' திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்திற்கான பூஜையுடன் படப்பிடிப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது. இதுசம்பந்தமான வீடியோ ஒன்றையும் ராஜ் கமல் ஃபிலில்ம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இப்படம் 2024ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.