தேசிய விருது பெற்று சாதனை... இளையராஜாவிடம் ஆசி பெற்ற ஶ்ரீ தேவி பிரசாத்..!
சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டதையடுத்து தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
69வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 24ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த படத்துக்கான விருதை மாதவனின் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ வென்றுள்ளது. சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை மணிகண்டனின் ‘கடைசி விவசாயி’ பெற்றுள்ளது. மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ‘புஷ்பா’ படத்துக்காக தேவிஸ்ரீ பிரசாத்துக்கு அறிவிக்கப்பட்டது. அவருக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், தனக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டதையடுத்து இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் தேவிஸ்ரீ பிரசாத். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்குச் சென்ற அவர், இளையராஜாவின் காலில் விழுந்து ஆசிபெற்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ”தேசிய விருது பெறுவதற்கு வழிவகுத்த அனைத்து ஊக்கங்களும் தந்த இசைஞானி இளையராஜாவுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
தேவி ஶ்ரீபிரசாத் ஒரு தனித்துவமான இசையமைப்பாளர். அவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். அதுவும் புஷ்பா படத்தில் வெளியான ஊ சொல்றியா மாமா பாடல் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில் இவருக்கு இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.