சுப்ரீம் டாடியும் சூப்பர் டாட்டரும்!

சுப்ரீம் டாடியும் சூப்பர் டாட்டரும்!

”வரலக்ஷ்மிகிட்ட ஜாக்கிரதையா இருங்க"-சரத் குமார் அட்வைஸ்.

அடடா... காட்டமான எச்சரிக்கை போல இருக்கிறதே! ஏதோ கோலிவுட் தகராறு, பஞ்சாயத்து என்று நினைத்து விடாதீர்கள். இது தன் மகளின் திறமையைக் கண்டு சந்தோசப்படும் ஒரு அப்பாவின் பெருமை மிகு நினைவு கூரல்.

'கொன்றால் பாவம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. தயாள் பத்மநாபன் இந்த படத்தை இயக்கி உள்ளார். வரலக்ஷ்மி சரத்குமார் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளார்.

விழாவின் சிறப்பு விருந்தினரானகப் பங்கேற்ற சரத்குமார் தன் மகள் குறித்துப் பேசும் போது சில சுவாரஸ்யமான தகவல்களை பார்வையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

'என் மகள் வரலக்ஷ்மி சினிமாவில் நடிப்பதில் எனக்கு முதலில் அதிக ஆர்வம் இருந்தது இல்லை. ஒரே ஒரு படம் தான் டாடி அதுக்கப்புறம் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் இன்று ஐம்பது படம் வரை முடித்து விட்டார். கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கிறது. ‘கொன்றால் பாவம்’ படத்தில் தைரியமான பெண்ணாக நடித்திருக்கிறார். நிஜ வாழ்க்கையிலும் வரு (வரலக்ஷ்மி ) தைரியமான பெண்தான்.

ஒரு முறை பெசன்ட் நகர் பகுதியிலிருந்து ”உங்கள் மகளுக்கு பிரச்சனை. சீக்கிரம் வாருங்கள்” என்று போன் வந்தது. நான் அந்த பகுதியில் உள்ள என் நண்பர்களை அழைத்து உடனே நேரில் சென்று என்ன ஆயிற்று என்று விசாரிக்கச் சொன்னேன். அவர்கள் சொன்னதிலிருந்து, அங்கு யாரோ ஒரு பையன் பைக்கில் சென்று கொண்டிருந்தவன் வருவை கிண்டல் செய்து இருக்கிறான். பதிலுக்கு வரலக்ஷ்மி அவனைச் செமத்தியாக கவனித்து' அனுப்பி இருக்கிறார். என்பது தெரிந்தது.

அது மட்டுமல்ல, வருவின் தைரியத்துக்கு இன்னொரு உதாரணம், ஒரு முறை ரிச்சி தெருவில் பிக் பாக்கெட் அடிக்கும் எண்ணத்துடன் வரலக்ஷ்மியின் பின்னால் கை வைத்தவனை அடி பின்னி எடுத்து விட்டார். எனவே வரலக்ஷ்மிகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்க.’ - என்று தனது மகளைப் பற்றி பெருமிதமாகப் பேசினார் சரத்குமார்.

அத்துடன் தன் மகளின் நடிப்புத் திறன் குறித்துப் பேசுகையில்,

”என் மகள் நடிப்பைப் பார்த்து வியந்த தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ‘வரு’ நடித்த படத்தின் காட்சிகளை லேப் டாப்பில் போட்டுக் காட்டி மகிழ்ச்சி அடைந்தார்” என்று பெருமையுடன் பேசினார் சரத்.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வரலக்ஷ்மி பேசும் போது "கொன்றால் பாவம்” படத்தில் தான் 80 களில் வாழும் ஒரு ரெட்ரோ கேரக்டரில் நடிப்பதாகவும் “ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு ஆண் இருப்பதாகச் சொல்வார்கள். என்னுடைய இந்த வெற்றிக்கு பின்னால் என் டாடி இருக்கிறார்" என்று பெருமையாகத் தெரிவித்தார்.

இதே போன்று தன் மகளின் நடிப்புத் திறனைக் குறித்து சரத்குமார் முன்பொரு முறையும் பெருமையுடன் நினைவு கூர்ந்திருக்கிறார். இயக்குனர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்தில் வரலஷ்மி நடித்த போது இப்படித்தான் சரத், வரலஷ்மி குறித்து உச்சி முகர்ந்து பெருமிதத்துடன் பேசி இருந்தார். தாரை தப்பட்டை திரைப்படத்தில் கரகாட்டக் கலைஞராக நடித்திருந்தார் வரலஷ்மி. முற்றிலும் நகரப் பின்னணி கொண்டவரான வரு, அத்திரைப்படத்தில் அசல் கரகாட்டக் கலைஞராகவே உருமாறி நடித்திருப்பார். அப்படத்தின் வெளியீட்டுக்குப் பின் இயக்குனர் பாலா தன்னை தொலைபேசியில் அழைத்து வருவின் நடிப்புத் திறன் குறித்து மிகுதியாகப் பாராட்டிப் பேசியதாக சரத் தனது நேர்காணலொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

’ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தன் மகளைச் சான்றோனாக்கிய தருணம்’ தான்.

பெருமை இருக்காதா என்ன?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com