மக்கள் மனதில் உதிராத பூ இயக்குநர் மகேந்திரனின் பிறந்தநாள் இன்று!

இயக்குநர் மகேந்திரன்
இயக்குநர் மகேந்திரன்

1970 களின் இறுதியில் தமிழ் சினிமா பல புதிய மாற்றங்களை கண்டது. புதிய வழியில் கதை சொல்லும் பல இளம் இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் வந்து கொண்டிருந்தார்கள். ஒரு புதிய அலை  தமிழ் சினிமா (New wave tamil cinema ) உருவாகிக்  கொண்டிருந்தது.

பாரதி ராஜா, பாலுமகேந்திரா, 'அவள் அப்படித்தான்' ருத்ரைய்யா என புதிய இயக்குநர்கள் வந்து கொண்டிருந்தார்கள் இந்த வரிசையில் மிக முக்கியமானவராக பார்க்கப்பட்டவர் இயக்குநர் மகேந்திரன் அவர்கள். தமிழ் சினிமாவின் முப்பெரு ஜாம்பவன்களில் ஒருவராக உள்ள இயக்குநர் மகேந்திரனின் பிறந்தநாள் இன்று. இவர் 1939ம் ஆண்டு ஜூலை 25 ம் தேதி பிறந்தார்.     

அலெக்சாண்டர் என்ற இயற்பெயர் கொண்ட மகேந்திரன் வரலாற்றில் பல்லவ மன்னன் மகேந்திர வர்ம பல்லவனால் ஈர்க்கப்பட்டு தன் பெயரை மகேந்திரன் என்று மாற்றிக்கொண்டார். மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும், காரைக்குடி அழகாப்பா கல்லூரிகளில் பட்டப்படிப்புகளை படித்தவர் கல்லூரியில் படித்த போது விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த எம். ஜி. ஆர் முன்பே மேடையில்  அன்றைய வணிக சினிமாக்களை விமர்சித்தார். 

Editor 1

இவரின்  உரையில் ஈர்க்கப்பட்ட எம். ஜி. ஆர். மகேந்திரனை திரைத்துறைக்கு வரும்படி உற்சாகப்படுத்தினார். மகேந்திரனும் படித்து முடித்ததும் சினிமாவிற்கு வந்தார்.தங்கப்பதக்கம் உட்பட பல்வேறு படங்களில் திரைக்கதையில் பணியாற்றினார். எம். ஜி. ஆரை ஹீரோவாக  மனதில் வைத்து கல்கி அவர்களின் பொன்னியின் செல்வனை படமாக்க  திரைக்கதை உருவாக்கினார். பல்வேறு காரணங்களால் இவரது பொன்னியின் செல்வன் கனவு நிறைவேறவில்லை.                 

1978 ம் ஆண்டு மகேந்திரனின் முதல் படமான முள்ளும் மலரும் வெளியானது. ரஜினியை ஹீரோவாக நடிக்க வைக்க பலர் எதிர்ப்புகள் கிளம்பின.எதிர்ப்பையும் மீறி ரஜினியை ஹீரோவாக நடிக்க வைத்தார் மகேந்திரன். படம் வெற்றி பெற்று பல விருதுகளை பெற்றுத்தந்தது . படத்தின் பாடல்களும், காளி ரஜினியையும் இன்றும் நம்மால் மறக்க முடியாது.1979ம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த உதிரிப்பூக்கள் திரைப்படம் இந்திய அளவில் சிறந்த படமாக பார்க்கப்படுகிறது. புதுமைப்  பித்தனின் சிற்றன்னை நாவலை மைய்யமாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கினார் மகேந்திரன்.நான்கு தெருக்கள் கொண்ட ஒரு கிராமம், இளையராஜாவின் இசை, சிறப்பாக நடிக்கும் நடிகர்கள் என ஒரு அற்புத திரைக்காவியமாக உதிரிப் பூக்கள் படத்தை தந்திருப்பார் மகேந்திரன். 

ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே உட்பட பன்னிரென்டு படங்கள் வரை இயக்கினார் மகேந்திரன்.2006 ல் வெளியான சாசனம் இவரது இயக்கத்தில் உருவான கடைசிப் படமாக அமைந்தது. தன்னுடைய திரை படைப்புகள் மூலம் மக்கள் மனதில் இடம்பெற்ற இயக்குநர் மகேந்திரன், பல ஆண்டுகள் கழித்து திரையில் வில்லனாக தோன்றிய படம்தான் தெறி. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் தன்னுடைய அசாதாரணமான நடிப்பால் வில்லன் கதாபாத்திரத்தில் ரசிகர்களை தெறிக்கவிட்டிருப்பார்.

Editor 1

பொதுவாக தன்னுடைய ஸ்டைலுக்காக புகழப்படும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்து நடிப்பு ஆற்றலை வெளிகொண்டு வந்த பெருமை இயக்குநர் மகேந்திரனையே சேரும். குறிப்பாக ஜானி படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்த ரஜினி, செனோ ரீட்டா பாடலில் மோனோ ஆக்டிங்கில் நடித்திருந்த காட்சி வெகு சிறப்பாக அமைந்திருந்தது. தனது ஆரம்பகால வாழ்க்கையில் மகேந்திரன் அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதை ரஜினி அவர்கள் பல முறை கூறியுள்ளார்.

சினிமா துறையினர் பலரை தொற்றிக்கொள்ளும் சாபக்கேடான  குடிப்பழக்கம் மகேந்திரன் அவர்களையும் தொற்றிக்கொண்டது. திறமையான படைப்பாளியாக இருந்தும் உடலுக்கு கேடான சில பழக்கத்தினால் பனிரெண்டு படங்கள் மட்டுமே இயக்க முடிந்தது.  காளி, வாத்தியார், ஜானி என இவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த 2019 ம் ஆண்டு   மகேந்திரன் மறைந்தார். மண்ணை விட்டு மறைந்தாலும் தனது படைப்புகள் வழியே மக்கள் மனதில் உத்திராத பூவாக வாழ்ந்து கொண்டுள்ளார் மகேந்திரன் அவர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com