59-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திருவிளையாடல் திரைப்படம்!

59-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திருவிளையாடல் திரைப்படம்!

மிழ்நாட்டில் 1960 களின் பகுத்தறிவு இயக்கங்கள் தீவிரமாக கடவுள் மறுப்பு கொள்கையை பிரச்சாரம் செய்து வந்தன.இந்த இயக்கங்கள் தங்கள் கொள்கைகளை பரப்ப திரைப்படத்தை ஒரு முக்கிய சாதனமாக பயன்படுத்தின.தமிழ் நாட்டில் உள்ள மக்களில் பலர் இந்த கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டனர். இதனால் தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவர்களும், ஆன்மீகவாதிகளும் மக்களின் இந்த போக்கை கண்டு கவலைப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில் தான் டைரக்டர் ஏ. பி. நாகராஜன் அவர்கள் திருவிளையாடல் என்ற முழு நீள பக்திப்படத்தை 1965 ம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதியன்று வெளியிட்டார். சைவ சமய பக்தி இலக்கியமான திருவிளையாடல் இலக்கியத்திலிருந்து நான்கு பகுதிகளை மட்டும் எடுத்து படமாக இயக்கினார் நாகராஜன்.

சிவாஜி கணேசனும், சாவித்ரி அவர்களும் கடவுள்களான பரமசிவன் -பார்வதியை கண் முன் காட்டியிருப்பார்கள்.சிவாஜி அவர்களையும் தாண்டி நடிப்பில் பிரமாதப்படுத்தி இருப்பார் நாகேஷ். போட்டியில் வெற்றி பெற்று பொற்கிழியை பெற வேண்டும் என்ற அவசரத்தை உடல் மொழியிலும், வறுமையின் பிடியில் இருக்கும் புலவனின் உணர்வுகளை முகத்திலும் காட்டி தருமி கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார் நாகேஷ்.

சிவாஜியும் நாகேஷ் இருவரும் பேசி நடிக்கும் காட்சி இன்று வரை தமிழ் சினிமாவில் முக்கிய காட்சியாக பார்க்கப்படுகிறது.திமிர் பிடித்த பாகவதராக பாலையா சிறப்பான நடிப்பை தந்திருப்பார்.படத்தின் பாடல்கள், நடிப்பு, கே. வி. மஹாதேவனின் இசை என அனைத்தும் மிக சரியான விகிதத்தில் கலந்து சிறந்த படாமாக இருக்கும் திருவிளையாடல். திருவிளையாடல் படத்தின் வசனங்கள் ஒலி பெருக்கியில் ஒலிக்காத ஊர் கோவில் திருவிழாக்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இப்படத்தின் வசனங்கள் பட்டி தொட்டி வரை செல்வாக்கு பெற்றவை.

இப்படத்தின் காட்சிகளை ரசிப்பது போலவே வசனங்களும் மக்களால் கொண்டாடப்படுகின்றன. பழந்தமிழ் இலக்கியத்தை ஒரு சிறந்த திரைப்படமாக உருவாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்று நிரூபித்து காட்டியவர் ஏ. பி. நாகராஜன் அவர்கள்.இந்த படம் வெளியான பின்பு 1967 ல் பகுத்தறிவு கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வந்தது.இருப்பினும் திருவிளையாடல் படத்தின் பாதிப்பால் பல்வேறு பக்திப் படங்கள் 1967 க்குப் பிறகு வரத் துவங்கின.திருவிளையாடல் வெற்றிக்கு பின்பு சிவாஜி அவர்கள் திருவருட்செல்வர், கந்தன் கருணை, திருமால் பெருமை போன்ற பக்தி படங்களில் நடித்தார். அனைத்தும் வெற்றிப் படங்களே.

மேற்கூறிய சிவாஜி நடித்த படங்கள் மட்டுமில்லாது பின்னாட்களில் வெளியான நவக் கிரக நாயகி, சமயபுரத் தாளே சாட்சி,கை கொடுப்பாள் கற்பாகாம்பாள், ராகவேந்திரா உட்பட பல படங்கள் உருவானதில் திருவிளையாடல் படம் பெற்ற வெற்றியின் பாதிப்பு இருக்கிறது. நமது தமிழ்நாடு மாநிலமும், தமிழ் சினிமாவும் பகுத்தறிவு மற்றும் பக்தி இரண்டையும் ஏற்றுக் கொள்ளும் சிறந்த களமாக இருக்கிறது என்பதற்கு திருவிளையாடல் போன்ற படங்களே சாட்சி.

மதுரை நகருக்கும், இந்த நகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் வருகை புரியும் பக்தர்களில் பலர் திருவிளையாடல் படத்தின் கதையில் மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் தருமி கதாபாத்திரத் தையும், படத்தில் ஏ. பி. நாகராஜன்அவர்கள் நக்கீரனாக நடித்து பேசிய நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற பாண்டிய மன்னனின் தர்பார் காட்சிகளையும் நினைவில் கொண்டு பேசிச் செல்வார்கள். கோவில்களில் பேசும் படமாக திருவிளையாடல் இருக்கிறது.

சினிமா மூலம் மக்களுக்கு நல்ல பக்தி விஷயங்களை புரிய வைத்து மனதில் நிற்க முடியும் என்று உணர்த்திய திருவிளையாடல் படம் வெளியாகி இன்றுடன் 58 ஆண்டுகள் நிறைவுச் செய்து, 59வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. திருவிளையாடல் மறக்க முடியாத சினிமா அல்ல என்றும் மனதில் நிற்கும் காவியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com